‘புராஜெக்ட் கே’; மிரட்டும் மேக்கிங் வீடியோ வெளியானது

புராஜெக்ட் கே
புராஜெக்ட் கே

பிரபாஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகும் ’புராஜெக்ட் கே’ திரைப்படத்தின் இரண்டாவது மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் பொருட்செலவிலான திரைப்படங்களில் சேர்கிறது புராஜெக்ட் கே. கொரோனா காலத்துக்கு முன்பாக அறிவிப்பானபோது, இந்த திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடியாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. தெலுங்கு மற்றும் இந்தி என இருமொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த அறிவியல் புனைவு த்ரில்லர் திரைப்படத்தின் பட்ஜெட் அதன் பின்னர் மேலும் எகிறியுள்ளது. புராஜெக்ட் கே என்பது ஒர்க்கிங் டைட்டில் மட்டுமே. இனிமேல்தான் திரைப்படத்தின் தலைப்பு சூட்டப்பட உள்ளது.

கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக தொடங்கிய படப்பிடிப்பின் இறுதியாக, இந்த வருடம் மே 28 அன்று திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சிஜிஐ பணிகள் காரணமாக அடுத்தாண்டு ஜனவரி 12க்கு திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி பிலிம்ஸின் பொன்விழா ஆண்டு திரைப்படம் என்பதால், அதனை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் புராஜெக்ட் கே தயாராகிறது.

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் உடன் ’பிக் பி’ அமிதாப் பச்சன் முக்கியத் தோற்றத்தில் நடிக்கிறார். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இதன் மூலம் நேரடி தெலுங்கு திரையுலகில் தீபிகா அடியெடுக்கிறார். கூடுதல் இளமைக்கு திஷா பட்டானியும் படத்தில் உண்டு. நாக் அஸ்வின் இயக்க, தொழில்நுட்ப ரீதியில் புராஜெக்ட் கே பெரும் பாய்ச்சல் எடுத்திருக்கிறது. கதையில் வரும் எதிர்கால வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் விஷேசமாக வடிவமைத்து தந்திருக்கிறது. இந்தியிலும் அதிக படங்களுக்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் இதிலும் தடம் பதிக்கிறார்.

திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை ரசிகர் மத்தியில் அதிகரிக்க, மேக்கிங் வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில், ஆடை வடிவமைப்பில் தொடங்கி பல்வேறு தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். 'அசம்பிளிங் தி ரைடர்ஸ்' என்ற பெயரில் வில்லனுக்கான புதுமையான உடுப்பு குறித்தும் தகவல்கள் விரிகின்றன. முதல் வீடியோ போன்றே இதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in