`கோச்சடையான்' படத்துக்காக வாங்கப்பட்ட 6.2 கோடி கடன்: லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!

 `கோச்சடையான்' படத்துக்காக வாங்கப்பட்ட 6.2 கோடி கடன்: லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த `கோச்சடையான்' படத்தை தயாரிக்க வாங்கப்பட்ட 6.2 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத லதா ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை எடுப்பதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் அபிர்சந்த் நஹார் என்பவரிடம் 6.2 கோடி கடன் பெற்றுள்ளார். அதற்கு, நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி முரளி பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து, முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது கடந்த 2015-ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், லதா ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி லதா ரஜினிகாந்த், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது பதிவு செய்யப்பட்ட சில பிரிவுகளை மட்டும் நீக்கி விட்டு மற்ற பிரிவின் கீழ் விசாரணை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லதா ரஜினிகாந்த் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in