ஆபாசமாக திட்டிய வழக்கில் பிரபல நடிகர் கைது: நடிக்க தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம்

ஆபாசமாக திட்டிய வழக்கில் பிரபல நடிகர் கைது:  நடிக்க தடை விதித்தது  தயாரிப்பாளர் சங்கம்

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாகத் திட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் ஸ்ரீநாத் பாசிக்கு, மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடிப்பதற்குத் தற்காலிக தடைவிதித்துள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. ‘22 பீமேல் கோட்டயம்’, ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘வைரஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், நாயகனாக நடித்துள்ள ‘சட்டம்பி’ படம் கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இசைப் பின்னணியில் சினிமாவுக்கு வந்த ஸ்ரீநாத் பாசி, இதற்கு முன்பு குணச்சித்திரம், நகைச்சுவை பாத்திரங்களே செய்துவந்தார். அவர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் முதல் படம் 'சட்டம்பி' தான். இந்தப் படம் தொடர்பாக, பிரபலமான யூடியூப் சேனல் ஒன்றுக்கு (பிகைண்ட்வுட்ஸ் மலையாளம்) அவர் பேட்டி அளித்தார். பெண் பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார்.

அப்போது, ஒரு கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, பெண் பத்திரிகையாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி மராடு போலீஸில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகாருக்கு பதிலளித்துள்ள ஸ்ரீநாத் பாசி, ‘‘ஒவ்வொருவரும் அவமானப்படுத்தப்படும் போது என்ன செய்வார்களோ, அப்படித்தான் பதிலளித்தேன். எந்த தவறும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில் விசாரணைக்காக மராடு காவல் நிலையத்தில் நேற்று ஆஜரான ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டார்.

என்ன பிரிவுகளில் வழக்கு?

இந்த நிலையல் ஸ்ரீநாத் பாசி மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 509 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும்வகையில் செயல்படுவது, 354 ஏ(பாலியல் துன்புறுத்தல்), 294(பி) ஆபாசமான பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளரை ஸ்ரீநாத் பாசி, அவதூறாகப் பேசியது தொடர்பான புகார் மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் வந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீநாத் பாசி நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதேபோல் ரெட் எப்.எம் நடத்திய நேர்காணலிலும் ஆண் தொகுப்பாளர் ஒருவரிடம் எரிச்சலுடன் பேசினார் ஸ்ரீநாத் பாசி. இந்த விவகாரம் புகாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in