
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கே இந்த நிலை என தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ளார். நேற்று நடந்த 'ஐமா ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் பேசிய அவர், "சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளி வந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளி வராமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.
நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது. ஆனால், அதன் வெளிமொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது. இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்தக் தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார். ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால் தெரியாது.
இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.