நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த பெண்ணுக்கு தயாரிப்பாளர் தாணு உதவி!

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த பெண்ணுக்கு தயாரிப்பாளர் தாணு உதவி!

தயாரிப்பாளர் தாணு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு வரும் பெண்ணின் சிகிச்சைக்காக உதவ முன்வந்துள்ளார்.

‘தெறி’, ‘கபாலி’, ‘அசுரன்’, ‘நானே வருவேன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ‘கலைப்புலி’ எஸ். தாணு. சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 33 வயதான பெண்மணிக்கு இவர் உதவ முன்வந்துள்ளார்.

ஒற்றைத் தாயான அவர் கடந்த இரண்டு வருடங்களாக நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார். மேலும், தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் பதிவும் செய்திருக்கிறார். இந்தப் பெண்மணிக்குதான் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் தாணு உதவி செய்திருக்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெண்மணிக்கு, ஐந்து லட்சம் தந்து உதவ வாய்ப்பளித்த காவேரி மருத்துவமனைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் தாணுவிடம் இது பற்றி காமதேனு இணையதளத்திற்காகப் பேசினோம். ‘அந்தப் பெண் எப்படி இருப்பார் என்று கூட எனக்குத் தெரியாது. காவேரி மருத்துவமனையில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. விஷயத்தைச் சொல்லி உதவிக் கேட்டதும் அதை உடனே ஒப்புக் கொண்டேன். இந்த நல்ல செயலைச் செய்ய இறைவன் கொடுத்த வாய்ப்பாகவே இதை கருதுகிறேன். அந்தப் பெண்மணி நன்றியோடு கண்கலங்கியதாக மருத்துவர் தெரிவித்தார். அவர் சீக்கிரம் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in