’த்ரிஷ்யம்’ படத்தின் தயாரிப்பாளரை பாராட்டி மத்திய அரசு சான்றிதழ் அளித்துள்ளது.
பிரபல மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர். ஆசிர்வாத் சினிமாஸ் என்ற நிறுவனம் மூலம் இவர் படங்கள் தயாரித்து வருகிறார். கடந்த 2000 -ம் ஆண்டு மோகன்லால் நடித்த 'நரசிம்மா' படம் மூலம் தயாரிப்பை தொடங்கிய இந்த நிறுவனம், இதுவரை சுமார் 32 படங்களைத் தயாரித்துள்ளது. மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம்', 'லூசிஃபர்', 'மரைக்காயர்' உட்பட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இந்த நிறுவனத்தை பாராட்டி சான்றிதழ் அனுப்பியுள்ளது. அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், சரியான நேரத்தில் வரியைத் தொடர்ந்து கட்டி வருவதால், அரசு பாராட்டுச் சான்றிதழ் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.