கேரளாவில் 'அவதார் 2’ வெளியாவதில் சிக்கல்?

கேரளாவில் 'அவதார் 2’ வெளியாவதில் சிக்கல்?

’அவதார் 2’ திரைப்படம் கேரளத் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற 'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம்  'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் புதிய டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி பிரம்மாண்டமாகத் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் (FEUOK), 'அவதார் 2' படத்தை திரையிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில், ‘அவதார் 2’ படத்திற்கான விநியோகஸ்தர்கள், கேரளாவில் இந்தப் படம் வெளியான முதல் வாரத்திலேயே இதன் வருவாயில் 60 சதவீதம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் வழக்கமாக 55 சதவீதம்தான் கொடுப்போம், அதைத் தாண்டி கொடுத்தால் எங்களுக்கு நஷ்டம் வரும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதன் காரணமாகவே, FEUOK அமைப்பு, 'அவதார் 2' திரைப்படம் தங்கள் அமைப்பின் கீழ் உள்ள 400 திரையரங்குகளில் திரையிடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சிக்கல் தொடர்பாக கேரளத் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டமைப்பு, ஹாலிவுட் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது அந்த மாநில ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in