காவிரி விவகாரம்... நடிகர் சித்தார்த்துக்கு பெங்களூருவில் கன்னட அமைப்பினர் அவமதிப்பு!

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

திரைப்பட புரமோஷன் தொடர்பாக நடிகர் சித்தார்த் பங்கேற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், கன்னட அமைப்பினர் புகுந்து கலாட்டா செய்ததில், நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சித்தார்த் வெளியேற வேண்டியதாயிற்று.

நடிகர் சித்தார்த் தனது நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சித்தா’ திரைப்படம் தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று, பெங்களூருவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் பங்கேற்று சித்தார்த் பேசிக்கொண்டிருக்கும்போது கன்னட ஆதரவு அமைப்பினர் அங்கே புகுந்து நிகழ்ச்சியை இடைமறித்தனர்.

காவிரி பிரச்சினைக்காக கன்னடர்கள் போராடும்போது தமிழ் நடிகர் சித்தார்த் பெங்களூருவில் நிகழ்ச்சி நடத்துவதா என அவர்கள் களேபரம் செய்தனர். அவர்களை சட்டை செய்யாது, நடிகர் சித்தார்த் கன்னடத்தில் தொடர்ந்து பேசி வந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

கன்னட அமைப்பினரை சமாதானப்படுத்த சிலர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. சித்தார்த் கன்னடத்தில் எடுத்து சொல்லியும் கன்னட ஆதரவு அமைப்பினர், நிகழ்வை தொடர்ந்து நடத்த அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அதிருப்தி அடைந்த நடிகர் சித்தார்த் வேறுவழியின்றி, அங்கிருந்து அமைதியாக வெளியேறினார்.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த அண்மை உத்தரவு, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியது. ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனிடையே நூற்றுக்கணக்கான கன்னட ஆதரவு அமைப்பினர் ஒன்று சேர்ந்து நாளை(செப்.29) முழு அடைப்பு நடத்தவும் அழைப்பு விடுத்திருக்கின்றன.

இவற்றின் மத்தியில் தமிழ் நடிகர் என்பதால் சித்தார்த்தின் நிகழ்ச்சியில் இடையூறு செய்ததும், அவரை அவமதித்து கன்னட அமைப்பினர் வெளியேற்றி இருப்பதும் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in