‘அடுத்த அத்தியாயம் இவள்!’ - அன்னையர் தினத்தில் நெகிழ்ந்த பிரியங்கா - நிக் ஜோடி

‘அடுத்த அத்தியாயம் இவள்!’ - அன்னையர் தினத்தில் நெகிழ்ந்த பிரியங்கா - நிக் ஜோடி

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கடந்த 2018-ல் அமெரிக்க பாடகரும், நடிகரும் பாடலாசிரியருமான நிக் ஜோனைத் திருமணம் செய்துகொண்டார்.

பிரியங்காவைவிட நிக் 10 வயது இளையவர் என்பதால் இவர்களது திருமணம் குறித்து ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வயது வித்தியாசம் காரணமாகவே விரைவில் இந்த ஜோடி பிரிந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், காதலுக்கு வயது வித்தியாசம் தடை இல்லை என்பதைத் தங்களது பல பதிவுகளின் மூலம் புரியவைத்து இந்தச் சர்ச்சைக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இந்த நிலையில்தான், கடந்த மாதம் ஜனவரியில் இருவரும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் இது தங்களது தனிப்பட்ட முடிவு எனவும் இதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார்கள். திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இன்னொரு பக்கம் பாலிவுட்டில் இது போல குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், தத்தெடுப்பதும் புதிதல்ல என்ற பேச்சும் நிலவியது.

இந்த நிலையில், இப்போது தன் குழந்தையை வீட்டிற்கு வரவேற்றுள்ள பிரியங்கா, அன்னையர் தினத்தில் தனது குழந்தையுடன் இருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், 'இந்த அன்னையர் தினம் எனக்கு சிறப்பான ஒன்று. பலரும் அனுபவித்து சொல்வது போல இந்த கடைசி மூன்று மாதம் எங்களுக்கு ரோலர் கோஸ்டர் பயணம் போலவே அமைந்தது. நூறு நாட்களைக் கடந்த பிறகு என்ஐசியூவிலிருந்து (பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு) இந்தச் சிறிய பெண் குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளாள்.

குழந்தை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம், அதற்கு உண்மையான நம்பிக்கையும் அன்பும் தேவைப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்கள் நிச்சயம் எங்களுக்குச் சவாலானதாகவே அமைந்தது.

ஆனால், அவற்றை எல்லாம் மதிப்புக்க மகிழ்ச்சியான தருணங்களாக இந்தச் சிறிய குழந்தை மாற்றிக் கொடுத்திருக்கிறாள். இவள் எங்களை வந்தடைந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் இவளுக்கு சிகிச்சை கொடுத்து ஒவ்வொரு நிமிடமும் அன்புடன் பாதுகாத்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் நன்றி. எங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் இப்போது தொடங்குகிறது. அம்மாவும் அப்பாவும் ஆகிய நாங்கள் உன்னை நேசிக்கிறோம்.

என் வாழ்வின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அதுமட்டுமில்லாமல், நிக் இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. அம்மாவாக என்னை உணர வைத்ததற்கு நன்றி! லவ் யூ!' என மகிழ்ச்சியான ஒரு நீண்ட பதிவைப் பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா.

மனைவியின் அன்பால் நெகிழ்ந்திருக்கும் நிக், ‘அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகள். ஆனால், நான் ஸ்பெஷலாக ஒரு நிமிடம் எனது மனைவி பிரியங்காவுக்கு அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்ல எடுத்துக்கொள்கிறேன்.

பேபி, நீ என்னை ஒவ்வொரு விதத்திலும் முன்மாதிரியாக இருக்கிறாய். அம்மா என்ற இந்த புது அவதாரத்தை மிக எளிதாக உறுதியாக எடுத்திருக்கிறாய். இந்தப் பயணத்தில் நான் உன்னுடன் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அன்னையர் தின வாழ்த்துகள். லவ் யூ!' எனப் பதிவிட்டுள்ளார் நிக்.

பிரியங்கா - நிக் தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in