
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், பிரியங்கா அருள் மோகன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார், விஜய் நடிப்பில் ’பீஸ்ட்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார். ரஜினியின் 169-வது படமான இதையும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினிக்கான ஓபனிங் பாடலை எழுதி, சின்ன கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் மகளாக நடிக்க, பிரியங்கா அருள் மோகனிடம் படக்குழு பேசி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. நடிகை பிரியங்கா, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ’டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். பிறகு ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்துள்ளார்.