தமிழர்களை சரியாக இந்தி பேசாதவர்களாக சித்தரித்தார்கள்

தமிழர்களை சரியாக இந்தி பேசாதவர்களாக சித்தரித்தார்கள்

பாலிவுட்டில் தென்னிந்திய திறமைகளுக்கு தற்போது கிடைத்து வரும் அங்கீகாரம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களில் நடித்து வரும் பிரியாமணி, ’த பேமிலிமேன்’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டுக்கு போயிருக்கிறார். அதற்கு முன்பே ஷாருக்கானின் ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தாலும் ’த பேமிலிமேன்’தான் அவரை பாலிவுட்டில் அடையாளப்படுத்தி இருக்கிறது. அஜய்தேவ்கனின் ’மைதான்’ இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ள பிரியாமணி, அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தென்னிந்திய சினிமாவுக்கும் நடிகர்களுக்கும் பாலிவுட்டில் சமீபத்தில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இறுதியாக, தென்னிந்திய திறமைகளும் அங்கீகரிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் ஸ்ரீதேவி, ரேகா, ஹேமமாலினி, வைஜயந்திமாலா போன்றோர் கொடிகட்டி பறந்தார்கள். இப்போது அப்படி யாரும் இல்லை. பாலிவுட்டில், சென்னையை சேர்ந்தவரையோ, கேரளாவை சேர்ந்தவரையோ காட்டும்போது, சரியாக இந்தி பேசாதவர்களாக, சித்தரிக்கப்பட்டார்கள். அதுபோன்ற பல படங்களைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் அவர்கள் காட்டுவது போல இந்தி பேசுவதில்லை. ஒரு வேளை, அவர்கள் சந்தித்தவர்கள் அப்படி பேசியிருக்கலாம். பிறகு தென்னிந்திய தொழிற்நுட்ப கலைஞர்கள் பாலிவுட்டுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் வெற்றிகரமாக முத்திரை பதித்தனர். இப்போது, தென்னிந்திய திறமைக்கும் நடிகர்களுக்கும் பாலிவுட்டில் அங்கீகாரம் கிடைப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு பிரியாமணி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in