`ப்ரியாதான் இந்த படத்தின் உயிர்'- `வள்ளி மயில்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

`ப்ரியாதான் இந்த படத்தின் உயிர்'- `வள்ளி மயில்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

`வள்ளி மயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. "வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ப்ரியா நடிக்கிறார். அவர்தான் இந்த படத்தின் உயிர்" என்று படத்தின் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்தார்.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் `வள்ளி மயில்'. படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், அறந்தாங்கி நிஷா, கனி அகத்தியன், புஷ்பா புகழ் சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி பி முத்து, தயாளன் உட்பட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் படத்தை தயாரிக்கிறார். 80களின் நாடகக்கலை பின்னணியில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

விழாவில் பேசிய படத்தின் நாயகி கனி, "நிறைய நுணுக்கமான விஷயங்களை திரையில் கூறுபவர் சுசீந்திரன். எனக்கு பீரியட் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டேன்" என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசுகையில், "இந்த படத்தின் கதையை வருடமாக எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ப்ரியா நடிக்கிறார். அவர்தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்" என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், "இந்த படத்தில் சுசீந்திரனிடம் இருந்து நான் இயக்கத்தை கற்றுக்கொண்டேன். இயக்கத்தில் நானும் இறங்கியதால் நான் ஒவ்வொன்றையும் கவனிக்கிறேன். படத்தை தரமாக உருவாக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன். இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர். அவர்களுடைய நடிப்பு திறமை அபாரமானது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் கூறிகொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in