'ஜெயிலர்' FDFS... படம் பார்க்க வரும் மதுரை ரசிகர்களுக்கு காத்திருக்கிறது ஆச்சரியம்!

ஜெயிலர்
ஜெயிலர்

ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தீபாவளி போல கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இவர்களுடன் சில தனியார் நிறுவனங்களும் இணைய முடிவு செய்துள்ளன.

2 வருட இடைவெளியில் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ திரைப்படம், மெய்யாலுமே அவரது ரசிகர்களுக்கு தீபாவளிதான். அதிலும், படம் வெளியாகும் தினத்தன்று ரஜினி ரசிகர்கள் பலரும் விடுப்பு எடுத்துக்கொண்டு திரையரங்குக்கு விரைவார்கள் என்பதால், சென்னை மற்றும் பெங்களூருவில் பல்வேறு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக அலுவலகத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

அதிகப்படியான ஊழியர்கள் விடுப்பு எடுப்பதால் அலுவலகப் பணி பாதிக்கும் என்பதற்கு அப்பால், இந்த அறிவிப்பின் மூலம் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு செலவின்றி விளம்பரமும் சேர இருக்கிறது.

தனது குரல், உருவம், ஸ்டைல் உள்ளிட்டவற்றை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு எதிராக, தனது வழக்கறிஞர் வாயிலாக ஏற்கெனவே பகிரங்க எச்சரிக்கையையும் ரஜினி விடுத்திருக்கிறார். மாறாக, இந்த முதல் நாள் முதல் காட்சிக்கான விடுமுறை அறிவிப்பின் வாயிலாக, ரஜினியின் எச்சரிக்கையில் சிக்காது விளம்பரம் சேர்க்க கிடைத்த வாய்ப்பினை, தனியார் நிறுவனங்கள் சில கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளன.

’ஜெயிலர்’ ரஜினிகாந்த்
’ஜெயிலர்’ ரஜினிகாந்த்

'ஜெயிலர்' வெளியீட்டை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்த வாட்டர் பில்டர் நிறுவனம் ஒன்று, இன்றைய தினம் புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மதுரையில் 'ஜெயிலர்' திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களை ஸ்வீட், குடிநீர், பட்டாசுடன் வரவேற்கத் தயாராகி வருவதாக அறிவித்திருக்கும் அந்த நிறுவனம், மதுரைக்கு அப்பாலும் 'ஜெயிலர்' படம் பார்க்கும் ரசிகர்களுக்கான தனி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'ஜெயிலர்' பட டிக்கெட்டின் விவரத்தோடு தங்களைத் தொடர்பு கொண்டால், தங்கள் தயாரிப்பு பொருட்களை சிறப்புத் தள்ளுபடியில் தருவதாகவும் உறுதியளித்திருக்கிறது. இந்த வகையில் நாசூக்காக 'ஜெயிலர்' திரைப்படம் மற்றும் ரஜினிகாந்தை தங்களுக்கான விளம்பர உத்தியாகவும் சேர்த்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in