ஒரு வழியா முடிச்சுட்டாங்க: 4 வருடமாக நடந்த பிரபல ஹீரோ பட ஷூட்டிங் நிறைவு

ஒரு வழியா முடிச்சுட்டாங்க: 4 வருடமாக நடந்த பிரபல ஹீரோ பட ஷூட்டிங் நிறைவு

நான்கு வருடத்துக்கு மேல் நடந்து வந்த பிரபல ஹீரோ நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கும் படம், ’ஆடுஜீவிதம்’. இதே பெயரில், பென்யாமின் என்ற எழுத்தாளர் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகும் படம் இது. சவுதி அரேபியாவுக்கு செல்லும் கேரள தொழிலாளிக்கு அங்கு பாலைவனத்தில் ஆடுமேய்க்கும் அடிமை வேலை கிடைக்கிறது. அவருக்கு தனது பசுமையான ஊர் மற்றும் குடும்பத்தின் நினைவுகள் துரத்த, அந்தப் பாலைவனச் சிறையில் இருந்து தப்பிக்க ஆபத்தான முடிவெடுக்கிறார். அதுதான் கதை இது. இதில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அமலாபால், ஷோபா மோகன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு, கேரளாவின் பத்தினம் திட்டாவில் தொடங்கியது. படத்துக்காக உடல் இளைத்து ஆளே மாறியிருந்தார் பிருத்விராஜ். இதன் முக்கியமான காட்சிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டும். அதற்குள், அவர் மற்ற படங்களை முடிக்க வேண்டும் என்பதால் அதில் கவனம் செலுத்தினார். இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இயக்குநர் பிளஸ்சி, பிருத்விராஜ்
இயக்குநர் பிளஸ்சி, பிருத்விராஜ்

பின்னர் ஜோர்டான் மற்றும் அல்ஜீரியாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஜோர்டான் சென்றனர். அங்கு படப்பிடிப்பில் இருந்தபோதுதான் கரோனா பரவல் தீவிரமடைந்தது. படக்குழு அங்கு சிக்கிக்கொண்டது. சுமார் 65 நாட்களுக்குப் பின் அவர்கள் சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்பினர்.

பிறகு ஒரு வருடம் படப்பிடிப்பு நடக்கவில்லை. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வந்தன. கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் ஜோர்டான் சென்றது படக்குழு. சஹாரா பாலைவனத்திலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதை நடிகர் பிருத்விராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 160 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு மலையாளப் படத்தின் ஷூட்டிங், இவ்வளவு நாள் நடத்திருப்பது இதுதான் முதன்முறை என்கிறார்கள்.

அதில், ’’14 வருடங்கள், ஆயிரக்கணக்கானத் தடைகள், ஒரு மில்லியன் சவால்கள், 3 கரோனா அலைகள், ஒரு பிரம்மாண்ட மான நோக்கம். பிளெஸ்ஸியின் 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பு நிறைவடைந்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in