திரை விமர்சனம்: ப்ரின்ஸ்

திரை விமர்சனம்: ப்ரின்ஸ்

’டாக்டர்’, ‘டான்’ என இரண்டு ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஹாட்ரிக் வெற்றி என்ற எதிர்பார்ப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகி இருக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

கடலூர் தேவனக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் அன்பு. அதே பள்ளியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெஸிகா ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர, அவரைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் அன்பு. சாதி, மதம் கடந்துதான் காதலிக்க வேண்டும் என மகனிடம் கடிதம் எழுதி உறுதி வாங்கிக்கொள்ளும் அளவுக்கு முற்போக்குவாதியான அதேசமயம் பிடிவாதம் கொண்ட தந்தை உலகநாதனாக சத்யராஜ். தந்தையின் ஆசைக்கேற்றவாறு ஜெஸிகா காதலியாக அமைந்தாலும் குறுக்கே இடையூறாக வந்து நிற்கிறது தந்தையின் தேசபக்தி. அன்புவின் அப்பாவிற்கு பிரிட்டிஷ்காரர்கள் என்றால் எப்படி தகராறோ அதேபோல, ஜெஸிகாவின் அப்பாவிற்கு இந்தியர்கள் என்றால் ஆகாது. இந்த இரண்டு தரப்புகளையும் சமாளித்து இந்தக் காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்கிறது என்பதை நகைச்சுவை பாணியில் கொண்டு சேர்த்திருப்பதுதான் ‘ப்ரின்ஸ்’ படத்தின் கதை.

‘டாக்டர்’ படத்தில் சீரியஸ் முகம், ‘டான்’ படத்தில் வழக்கமான கமர்ஷியல் ஹீரோ என்றால் ‘ப்ரின்ஸ்’ படத்தில் தனியொருவராக மொத்தக் கதையும் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் நிறைக்கிறார் சிவகார்த்திகேயன். காமெடி கவுன்டர்கள், கதாநாயகியிடம் பல்பு வாங்குவது, சிங்கிள் டேக் நடனம் என படத்திற்குப் படம் மிளிர்கிறார். படத்தின் கதாநாயகி ஜெஸிகாவாக மரியா ரியாபோஷாப்கா. தமிழில் முதல் படம் என்ற தடுமாற்றம் நடிப்பில் ஆங்காங்கே தெரிந்தாலும் போகப்போக... கதையின் ஓட்டத்தில் ஒன்றிப் போயிருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படக் கதாநாயகி டெம்ப்ளேட்டுக்குள் இல்லாமல், அறிமுகத்திலேயே படம் முழுவதும் இருக்கும்படியான, நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்பது அவருக்கு ப்ளஸ்.

சிவகார்த்திகேயனின் அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ். கதைப்படி இவருடைய கதாபாத்திரத்தால்தான் காதலுக்கு பிரச்சினையே வருகிறது. எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்த மேதாவியாகக் காட்டிக்கொள்ளும் உலகநாதனாக சத்யராஜ் நடிப்பில் அசால்ட் செய்திருந்தாலும் பல இடங்களில் நகைச்சுவை என அவர் தரும் மிகை நடிப்பும் நீண்ட வசனங்களும் அயர்ச்சியையே ஏற்படுத்துகின்றன. கதையின் வில்லன் எனவும் சொல்ல முடியாமல், நகைச்சுவை நடிகர் என்ற வரையறைக்குள்ளும் வராமல் அன்பு - ஜெஸிகாவின் காதலை பிரித்து வைக்கப் போராடும் கதாபாத்திரமாக வருகிறார் பிரேம்ஜி. படத்தில் ஆனந்த்ராஜ், சூரி வரும் காட்சிகள் எல்லாம் தேவையில்லாமல் நீளத்தைக் கூட்டுவதாக அமைந்திருப்பது குறை.

தமன் இசையில் ‘பிம்பிளிக்கி பிளாப்பி’, ‘ஜெஸிகா’ பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் திரையரங்குகளில் தாளம் போட வைக்கிறது. ’ஜதிரத்னலு’ இயக்குநர் அனுதீப் தமிழுக்கு ஏற்றபடி கதைக்களத்தை எழுதியிருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல், கதையில் வரும் நகைச்சுவை செயற்கைத்தனமாக அமைந்து அயற்சியைக் கூட்டுகிறது. அதேபோல, இடைவேளையிலேயே கதையின் க்ளைமாக்ஸை ஊகிக்க முடிந்த நிலையில் நீளமாக அமைந்த இரண்டாம் பாதி படத்தின் இன்னொரு மைனஸ்.

அவ்வப்போது சிரித்து ரசிக்க வைக்கும் ஒன்லைனர்கள், ஹிட் பாடல்கள் என சில சிறப்பம்சங்கள் இருப்பதால், இந்தத் தீபாவளிக்கு குடும்பத்துடன் போய் ஒருமுறை பார்த்து வர ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் நல்ல சாய்ஸாக அமையும். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in