`தீபாவளிக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் `ப்ரின்ஸ்’- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

`தீபாவளிக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் `ப்ரின்ஸ்’- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

``தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் `ப்ரின்ஸ். இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகிறது. அனுதீப் இயக்கி இருக்கும் இந்தப் படம் தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது. மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குநர், நடிகர் சிவகார்த்திகேயன், மரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “ப்ரின்ஸ் படத்தைப் பொருத்தவரை இது ஒரு எளிமையான கதை. இந்திய பையன் ஒருவன் ப்ரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறான் என்ற ஒரு வரிதான். இதில் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடி விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொருத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். காமெடி கவுன்டர்கள் என்றில்லாமல், நாம் பேசும்போது சம்பந்தமே இல்லாத வேறொரு பதில் சொல்வது என கதை நகரும். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. அனுதீப் உருவாக்கிய ஊர் அது. அந்த மக்கள் அனைவரும் அவர்கள் சிந்திப்பதுதான் சரி என்று யோசிப்பார்கள்.

அப்படியான ஊரில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு வரும் லக், பிரச்சினைகள் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் இவைதான் படம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. எல்லாருக்கும் பிடிக்கும்படியான ஜாலியான படம் இது. தீபாவளிக்கு குடும்பங்களாக பார்க்கும்படியான என்டர்டெயின்மென்ட்டான படம். இன்னொரு பக்கம் கார்த்தியின் ‘சர்தார்’ படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் முற்றிலும் வேறான கதைக்களம். இரண்டு படங்களின் வெற்றிக்கும் வாழ்த்துகள். அனுதீப் தெலுங்கில்தான் யோசிப்பார். இதை தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஏற்ற மாதிரி கொண்டு போய் சேர்ப்பதுதான் எங்கள் முன் இருந்த சவால். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னால் அக்டோபர் 21 அன்று வெளியாகிறது. தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in