
`` ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு நானும் என் கணவரும் கண்ணீரோடு வெளியே வந்தோம்'' என்று நடிகை பிரணீதா சுபாஷ் தெரிவித்துள்ளார்.
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து உயிர் பயத்துடன் தப்பிய உண்மைச் சம்பவங்களை கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தைப் பலர் பாராட்டி வருகின்றனர்.
ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை தனது கணவர் நிதின் ராஜூவுடன் பார்த்த நடிகை பிரணீதா, கண்ணீர் விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக வலைதளப் பக்கத்தில் அவர், ``30 வருடத்துக்கு முன் காஷ்மீர் பண்டிட்கள் அனுபவித்த, உலுக்கும் உண்மையை அறிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படம் இது. படம் முடிந்ததும் நானும் என் கணவரும் கண்ணீருடன் வெளியே வந்தோம். நீங்கள் பார்க்கவில்லை என்றால் தயவு செய்து பாருங்கள்’' என்று கோரிக்கை வைத்துள்ளார்.