கணவருக்கு பாதபூஜை: விமர்சனங்களுக்கு பிரபல நடிகை பதிலடி

கணவருக்கு பாதபூஜை: விமர்சனங்களுக்கு பிரபல நடிகை பதிலடி

கணவருக்கு பாதபூஜை செய்த புகைப்படத்துக்கு எழுந்த கடும் விமர்சனங்களுக்கு நடிகை பிரணிதா பதிலளித்துள்ளார்.

அருள்நிதி நடித்த உதயன், சூர்யாவின் மாஸ், கார்த்தியின் சகுனி உள்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் பிரணிதா. தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. குழந்தையின் புகைப்படத்தை அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு தனது கணவருக்கு பிரணிதா பாதபூஜை செய்தார். அந்தப் புகைப் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அது வைரலானது. அதைப் பாராட்டியும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் அதற்கு நடிகை பிரணிதா பதிலளித்துள்ளார். ``வாழ்க்கையில் அனைத்துக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் 90 சதவீதம் பேர் நல்ல கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மற்றவர்களைப் புறக்கணிக்கிறேன். கிளாமரான சினிமா உலகில் இருப்பதால், நான் பார்த்து வளர்ந்த, நம்புகிற சம்பிரதாயத்தைப் பின்பற்ற மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. என் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்கள், நண்பர்கள் ஆகியோரும் இந்த சம்பிரதாயங்களைச் செய்கிறார்கள். கடந்த வருடம், நான் புதிதாகத் திருமணமானபோதும் இதைச் செய்தேன். ஆனால், அந்தப் புகைப்படங்களை பகிரவில்லை.

உண்மையில் இது எனக்கு புதிய விஷயமல்ல. எப்போதும் பாரம்பரியத்தைப் பின்பற்றும் பெண்ணாகவே இருக்கிறேன். வீட்டில் இருப்பதும் கூட்டுக் குடும்பத்துடன் வாழ்வதும் எப்போதும் பிடித்திருக்கிறது. சனாதனதர்மத்தை நான் உறுதியாக நம்புகிறேன். ஒருவர் முன்னோக்கி சிந்திக்கக் கூடியவராகவும் நவீனமாகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக தனது வேர்களை மறக்கக் கூடியவர் என்று அர்த்தமல்ல.

கணவருக்கு ஏன் பாதபூஜை செய்யவேண்டும், மனைவிக்கு அவர் செய்யலாமே? என்று கேட்கிறார்கள். இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். நாம் ஒவ்வொருவரும் மற்றவர் நலனுக்காக பிரார்த்திப்போம்'' என்று பிரணிதா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in