`மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண்'- அமைச்சர் ரோஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா

`மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண்'- அமைச்சர் ரோஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா

ஆந்திர அரசின் அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா செல்வமணிக்கு தென்னிந்திய திரைத்துறை சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

ஆந்திர அரசின் கலாச்சார, சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா செல்வமணி பொறுப்பேற்றுள்ளார். இதனை பாராட்டும் விதமாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவோடு தென்னிந்திய திரைத்துறையினர் இணைந்து இயக்குநர் பாரதிராஜா தலைமையில் மே 7-ம் தேதி ரோஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் காட்ரகட்டா பிரசாத் கூறுகையில், "ரோஜா எங்கள் தயாரிப்பில் இரண்டு படங்கள் செய்துள்ளார். டிசிப்ளின் என்றால் அவர் தான். அவ்வளவு கடுமையான உழைப்பாளி. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பை தருபவர். அவர் தென்னிந்திய சினிமாவின் நடிகை எனவே அவருக்கு தென்னிந்திய திரைத்துறை முழுதும் இணைந்து பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆர் கே செல்வமணி பெப்சி சார்பில் மீண்டும் மீண்டும் பதவிக்கு வருகிறார் அது போல் ரோஜாவும் மீண்டும் மீண்டும் இந்த பொறுப்புக்கு வர வேண்டும்" என்றார்.

இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், "செல்வமணி எனது திரைத்துறை நண்பன், அல்ல குடும்ப நண்பன், ரோஜாவுக்கு நான் தான் பெயர் வைத்தேன். நான் எதை தொட்டு பெயர் வைத்தாலும் விளங்குதே என நான் என் அப்பா அம்மாவை நினைத்து பெருமை கொள்வேன். ரோஜாவுக்கு பெயர் வைத்ததற்கு பெருமை கொள்கிறேன். தனக்கு சரியென்று நினைத்ததை மிக தைரியமாக சொல்லக்கூடிய பெண். எந்த ஒரு விசயத்திலும் மிக தெளிவாக இருப்பார். செல்வமணியை மேடையில் நான் தான் பேச வைத்தேன், இப்போது மிக அற்புதமாக பேசுகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் பெரிய ஆளாக வருவார். தன் மனைவிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றி பெற வைத்துள்ளார் செல்வமணி. ரோஜா ஒரு மந்திரியாக பதவி ஏற்றிருப்பது பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது. தென்னிந்திய திரைத்துறையை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளும் பிரமாண்ட விழாவாக இது இருக்கும். ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டும். இந்த விழாவிற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்" என்றார்.

Related Stories

No stories found.