'பொய்க்கால் குதிரை’ படத்தில் ஒற்றைக்காலுடன் பிரபுதேவா நடனம்

'பொய்க்கால் குதிரை’ படத்தில் ஒற்றைக்காலுடன் பிரபுதேவா நடனம்

'பொய்க்கால் குதிரை' படத்தில் ஒற்றைக்காலுடன் நடனம் ஆடியிருக்கிறேன் என்று பிரபுதேவா கூறினார்.

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பொய்க்கால் குதிரை’. பிரபுதேவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஜான் கொக்கேன், ஜெகன், பரத், குழந்தை நட்சத்திரம் பேபி ஆரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர், இதற்கு முன், ‘ஹர ஹர மகாதேவகி’, இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவில் பிரபுதேவா, டி இமான், மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் பள்ளூ, வசனகர்த்தா மகேஷ், வரலட்சுமி சரத்குமார், தயாரிப்பாளர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில்," 'இந்தப் படத்தின் நடன இயக்குநர் சதீஷ், 'ஜூன் போனால் ஜூலை..' எனும் பாடலில் எனது சகோதரருடன் ஆடி இருப்பார். அப்போதே அவருடைய உற்சாகமான நடனத்தை கண்டு ரசித்தேன். இதில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டி இருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். அவர் உதவியாளர்கள் என்னை விட நன்றாக ஆடினார்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

படத்தில் ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்த போது எந்த சிரமமும் இல்லை . சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாகவும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். இந்தப் படத்தின் படத்தொகுப்பு பாணி வித்தியாசமாக இருக்கும். நடிகை வரலட்சுமி திறமையான நடிகை. இயக்குநர் சந்தோஷ் குமார் இதற்கு முன் வேறு மாதிரியான படங்களை இயக்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர் என்னிடம் சொன்ன கதை பிடித்திருந்தது. சொன்ன விதமும் பிடித்திருந்தது. அதனால் இதில் நடித்தேன். இது நல்ல திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது" என்று பிரபுதேவா கூறினார். இந்தப் படம் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in