`சலார்’ படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி: படக்குழு மிரட்டல் திட்டம்

`சலார்’ படத்துக்காக பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சி: படக்குழு மிரட்டல் திட்டம்

பிரபாஸின் ’சலார்’ படத்துக்காக, இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சியை படமாக்க உள்ளனர்.

கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்து இயக்கும் படம் ’சலார்’. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயின். ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், மது குருசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது.

இதில், பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. நடிகர் பிருத்விராஜ் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நடிக்க அதிக நாட்கள் தேவைப்படுவதால், கால்ஷீட் ஒதுக்குவதில் சிரமம் இருக்கிறது என்று கூறியிருந்தார் பிருத்விராஜ்.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க இருக்கிறது. அப்போது பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சியை , செங்குத்தான பள்ளத்தாக்கு ஒன்றில் படமாக்க இருக்கின்றனர். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த காட்சியும் இருக்கும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது. இதை முடித்துவிட்டு, மிரட்டலான சேஸிங் காட்சியையும் எடுக்க இருக்கின்றனர்.

இதுபற்றி படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, சேஸிங் மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும் என்றார். கே.ஜி.எஃப் படங்களில், ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் அதிரடியாக ரசிகர்களைக் கட்டிப் போட்ட இயக்குநர் பிரசாந்த் நீல், இந்தப் படத்தில் ரசிகர்களை இன்னும் மிரள வைப்பார் என்கிறார்கள்.

பாகுபாலி-க்குப் பிறகு பிரபாஸ் நடித்த ’சாஹோ’, ’ராதே ஷ்யாம்’ ஆகிய பான் இந்தியா படங்கள் பெரிய அளவு ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதனால், பிரபாஸ் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in