
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வரலாற்றை படமாக தயாரிக்க உள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.
தமிழர்களுக்கு தனி ஈழம் கேட்டு போராடி வந்தவர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன். இலங்கை அதிபர்களாக இருந்த சந்திரா, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்தார் பிரபாகரன். கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வந்தது. இந்தப் போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்றுகுவித்தது இலங்கை ராணுவம். இந்தப் போரை முன்னின்று நடத்திய விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி வீரமரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, தமிழர்கள் வசிக்கும் பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. பிரபாகரன் மறைந்து 13 ஆண்டு ஆகியும் இன்னும் அவரது புகழ் தமிழகத்தில் நினைத்து நிற்கிறது.
இதனிடையே, பிரபாகரனின் வரலாற்றை படமாக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள் என்ற அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேட்ப ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்கு தெரியவரும்' என்று கூறியுள்ளார்.