பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்: கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்

கே.முரளிதரன்.
கே.முரளிதரன்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான கே.முரளிதரன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 65.

கடந்த 1994-ம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடித்த 'அரண்மனை காவலன்' படத்தின் மூலம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது திரைப்பயணத்தைத் துவக்கியது. இந்த நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் கே.முரளிதரன். இந்நிறுவனம் சார்பில் வி.சுவாமிநாதன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்', விஜயகாந்த் நடித்த 'வீரம் விளைஞ்ச மண்ணு', பிரபு நடித்த 'மிஸ்டர் மெட்ராஸ்', கார்த்திக் நடித்த 'கோகுலத்தில் சீதை', விஜய் நடித்த 'பகவதி', சூர்யா நடித்த 'உன்னை நினைத்து', தனுஷ் நடித்த 'புதுப்பேட்டை', ஜெயம் ரவி நடித்த 'சகலகலா வல்லவன்' உள்பட 25-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

அண்மைக்காலமாக படங்களை தயாரிக்காமல் கே.முரளிதரன் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், நவ.30-ம் தேதி மனைவி ருத்ரா மற்றும் கும்பகோணத்தைச்சேர்ந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி ஆகியோருடன் திருநள்ளார், பட்டீஸ்வரம், நாதன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு கே.முரளிதரன் சென்றிருந்தார். இன்று காலை, ஆலங்குடி குருபகவான் கோயிலுக்குச் சென்று விட்டு, நாச்சியார்கோயிலுக்கு மூன்று பேரும் வந்தனர். கோயில் மூலவர் அருகிலுள்ள கல்கருடன் பகவானைத் தரிசனம் செய்ய முயன்ற போது, திடீரென மயங்கி அங்குள்ள படிக்கட்டில் கே.முரளிதரன் அமர்ந்தார் . இதனையறிந்த அவருடைய மனைவி ருத்ரா, மக்கள் தொடர்பாளர் ஸ்வீட் ரவி மற்றும் அங்கிருந்தவர்கள், அவரை, கோயில் அருகிலுள்ள மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

ஆனால், நிலைமை மிகவும் மோசமானதால் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அவரது உடல், சென்னையிலுள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவிற்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in