வால்மீகி பகவான் பற்றி அவதூறு...மக்கள் போராட்டம்: பிரபல நடிகர் திடீர் கைது

வால்மீகி பகவான் பற்றி அவதூறு...மக்கள் போராட்டம்: பிரபல நடிகர் திடீர் கைது

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக பிரபல நடிகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல பஞ்சாபி மொழி நடிகர் ராணா ஜங் பகதூர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, வால்மீகி பகவான் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். தங்கள் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, அவருக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடிகர் ராணா ஜங் பகதூரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

வரும் 10-ம் தேதிக்குள் அவரை கைது செய்யாவிட்டால், 11-ம் தேதி மாநிலம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ஜலந்தர் நீதிமன்றத்தில் நடிகர் ராணா ஜங் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைதுக்குப் பின் தனது செயலுக்கு வால்மீகி சமூகத்தினரிடம் அவர் கூப்பிய கைகளுடன் மன்னிப்புக் கேட்டார். ‘நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. நடிகன் மட்டுமே. என் கருத்துகளால் யாரும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருகிறேன். சமூகம் பெரியது. நான் மிகவும் சிறியவன். என்னை மன்னியுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் சட்டப்பிரிவு 295-ன் கீழும் பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜலந்தர் துணை ஆணையர் ஜஸ்கிரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in