`நான் அதிர்ச்சியடைந்தேன்; என் மானேஜர் பீதி அடைந்துவிட்டார்'- கேன்ஸ் விழா குறித்து நடிகை பூஜா

`நான் அதிர்ச்சியடைந்தேன்; என் மானேஜர் பீதி அடைந்துவிட்டார்'- கேன்ஸ் விழா குறித்து நடிகை பூஜா

கேன்ஸில், நடிகை பூஜா ஹெக்டேவின் உடைகள், மேக்கப் சாதனங்கள் மாயமானது தெரிய வந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 75-வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், கலந்து கொள்வதும் தங்களின் படம் அதில் திரையிடப்பட வேண்டும் என்பதும் சர்வதேச திரை கலைஞர்களின் கனவாக இருக்கிறது.

இந்த விழாவில், இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. இந்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி, மூத்த இயக்குநர் சேகர் கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர்கள் மாதவன், நவாஷுதின் சித்திக், நடிகைகள், தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் இந்திய குழுவினரின் ஒரு பகுதியாக பங்கேற்றுள்ளனர். அதோடு நடிகர் கமல்ஹாசன், பா.ரஞ்சித், பார்த்திபன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்

இந்த விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே, இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதிநிதியாக இதில் கலந்துகொண்டது பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.

இந்நிலையில், விழாவுக்கு முன்பாக அவர் தனது உடைகள், மேக்கப் சாதனங்கள் அடங்கிய லக்கேஜ்களை தொலைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அவர் கூறும்போது, ``என் உடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை இழந்துவிட்டோம் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். என்னை விட என் மானேஜர் அதிகம் பீதி அடைந்திருப்பார். இருந்தாலும் எங்களுக்கு நேரமில்லை. காலை, மதியம் சாப்பிடாமல், அலைந்து திரிந்து, வேறு உடைகளையும் மேக்கப் சாதனங்களையும் என் டீம் வாங்கி வந்து சமாளித்தது. சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொள்ளும் முன்தான், நான் அன்றைய சாப்பாட்டைச் சாப்பிட்டேன். அது பரபரப்பான நிகழ்ச்சி. இதற்கிடையே என் சிகை அலங்கார நிபுணருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது. என்னுடன் வந்த மற்றக் குழுவினர் என் சிகையை சரிசெய்தார்கள். பிறகு சிவப்புக் கம்பள வரவேற்பில், என் உடை அழகாகவே மாறியது’ என்று தெரிவித்துள்ளார்.

உடைகள் அடங்கிய ஒரு பெட்டியை இந்தியாவிலும் மற்றொரு லக்கேஜ்ஜை பாரிஸிலும் நடிகை பூஜா ஹெக்டே தொலைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in