ஜெயம் ரவி ஆச்சரியம், த்ரிஷா பிரமிப்பு, கார்த்தி சுவாரஸ்யம்: `பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா ஹைலட்ஸ்

ஜெயம் ரவி ஆச்சரியம், த்ரிஷா பிரமிப்பு, கார்த்தி சுவாரஸ்யம்: `பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா ஹைலட்ஸ்


‘பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், த்ரிஷா, கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, காளிதாஸ் ஜெயராம் என படக்குழு மொத்தமும் கலந்து கொண்டது.

சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்து இருக்கிறது.

கதையின் நாயகனான ‘பொன்னியின் செல்வன்’ அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘ஜெயம்’ ரவி நிகழ்ச்சியில் பேசுகையில், ``இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்கிறார்கள். நிச்சயம் எனக்கு தெரியாது. மணிரத்தினம் என்னை கூப்பிட்டார். நான் சென்று நடித்தேன். ’உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’ என்ற ரஜினி சாரின் வசனம் தான் நினைவிற்கு வந்தது.

நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன்.

பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது, ’நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள்’ என்று கூறினார். அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். கார்த்தி இந்த படத்தின் மூலம் சிறந்த நண்பன் ஆகிவிட்டான். அவன் வளர்வதைப் பார்க்க பிடிக்கும். விக்ரம் சார் உலகளவில் பேசப்பட வேண்டும் மனதார வேண்டிக் கொள்கிறேன். விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் சார் மற்றும் அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி’ என்றார்.

கதையின் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா பேசும் போது, ``இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல தோன்றுகிறது. 2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசிர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி'' என்றார்.

ARUNPRASATH

கதையின் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி, ‘பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த கதை இது. இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தில் நடிக்கும் போது என் கவனம் முழுக்க இதில் மட்டுமே இருந்தது. தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கால்வாசி நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். இந்த தலைமுறையில் இந்த படம் செய்ய முடிந்தது என்பதில் மகிழ்ச்சி. எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தது. கற்பனை மற்றும் நிஜ கதாபாத்திரம் என கலந்து அமைத்த கதை இது. இயக்குநருடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயமோகனுடைய கற்பனையும் இதில் இருக்கிறது. படம் பாருங்கள். நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும்’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in