‘பொன்னியின் செல்வன்’- வசீகரிக்கிறதா வரலாற்றுப் புதினத்தின் திரை வடிவம்?

‘பொன்னியின் செல்வன்’- வசீகரிக்கிறதா வரலாற்றுப் புதினத்தின் திரை வடிவம்?

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் தொடங்கி கமல் வரை பலரும் திரைப்படமாக்க முயன்ற படைப்பு, எழுத்தாளர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல். ஐந்து பாகங்கள் கொண்ட நாவலாக விரியும் கதையை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாகச் சுருக்கி படமாக்கி இருக்கிறார் மணிரத்னம். அதில் இன்று வெளியாகி இருக்கும் முதல் பாகமான ‘பொன்னியின் செல்வன்-1’ எப்படி இருக்கிறது?

வானில் வால் விண்மீன் ஒன்று தோன்ற, சோழ ராஜ்ஜியத்தில் உயிர் ஒன்று பிரியும் என சாஸ்திரம் கணிப்புக்கு ஏற்றபடி சோழ நாட்டு அரியணையைப் பிடிக்க சோழ தேசத்துக்குள் சதி மூள்கிறது. இன்னொரு பக்கம் தங்கள் மன்னனைக் கொன்ற சோழர்களை கருவறுக்க சபதமேற்கிறது பாண்டிய குலம். இந்தச் சதியில் இருந்து சோழர்கள் மீண்டார்களா அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் கதை.

சோழ நாட்டில் அரியணைக்காக நடக்கும் சதி கடம்பூரில் இருக்கும் இளவரசன் ஆதித்த கரிகாலருக்குத் தெரிய வர, இந்த விஷயத்தைத் தனது தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கும், தங்கை குந்தைவைக்கும் தெரியப்படுத்த வாணர் குலத்தோன் வல்லவரையன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்புகிறார். இளவரசரின் ஆணையை ஏற்று சோழ தேசம் செல்லும் வந்தியத்தேவன் இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது யார் என்று தெரிந்துகொண்டு அதை அரசரிடமும் இளவரசியிடமும் சொல்ல, இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் முதல் பாகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

ஐந்து பாகங்களைக் கொண்ட கதை எனும்போது அதை இரண்டு பாகங்களாகத் திரைமொழிக்கு ஏற்ப சுருக்குவது என்பது சவாலான ஒரு விஷயம். அப்படியான ஒரு கதையை திரைக்கதையாக ஜெயமோகன் – இளங்கோ குமரவேல்- மணிரத்னம் குழு திறம்பட கையாண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஆனால், நாவல் படிக்காமல் கதை தெரியாமல் புதிதாகப் படமாகப் பார்க்க வருபவர்களுக்குப் பல கதாபாத்திரங்களின் டீட்டெயிலிங் முழுமையாக இல்லாதது ஒரு குறையாகத் தெரியலாம். சில காட்சிகள் குழப்பம் தரலாம். எனினும் படம் ரசிகர்களை வசீகரிக்கவே செய்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று நடிகர்கள் தேர்வு. இதுநாள் வரை கற்பனையில் இருந்த வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், நந்தினி, குந்தவை, பழுவேட்டரையர்கள் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரையில் பார்க்கும்போது அவ்வளவு பரவசம். கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார். ஜெயராம் என அனைவருமே ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களாக, அந்தந்தப் பாத்திரங்களுக்குத் தங்களுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

குறும்பும் வீரமும் நிரம்பிய வந்தியத்தேவன், அறிவும் அழகும் ஒன்று சேர்ந்த குந்தவை, அழகும் வஞ்சமும் நிரம்பிய நந்தினி, காதல் வடுவும் வீரமும் கொண்ட ஆதித்த கரிகாலன், நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாத நம்பி, அமைதியும் இளமையும் வீரமும் ஒருங்கிணைந்த பொன்னியின் செல்வர் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையும் கதையோட்டத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. குறிப்பாக வந்தியத்தேவனாக கார்த்தியும், நம்பியாக ஜெயராமும் ஒன்றிணையும்போது குறும்பும் குதூகலமும் தெறிக்கும் வசனங்களும் உரையாடலும் பட்டாசு. ஆனால், ‘கல்கி’யின் கதையில் சித்தரிக்கப்பட்ட வானதியின் காதல் முகமும், பூங்குழலியின் குறும்பும் வீரமும் படத்தில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்படாமல் மேலோட்டமாகக் கடந்திருப்பது போன்ற உணர்வைத் தருவது குறை.

அதேபோல, குந்தவை ஆதித்த கரிகாலரைத் தஞ்சைக்குத் திரும்ப கூட்டி வரச் செல்வது, பழுவேட்டரையர்கள் சிற்றசர்கள் சதி ஆலோசனையைக் கலைத்துவிட உள்நுழவது எனக் கதையில் இல்லாத சில காட்சிகள் திரைமொழிக்காகச் சேர்த்திருப்பது ஆகியவையும் சுவாரசியம். நந்தினியின் அழகில் மயங்கி வந்தியத்தேவன் பேசும் வசனங்கள், குந்தவையிடம் காதலில் உருகுவது, பூங்குழலியிடம் வம்பிழுப்பது, அருள்மொழி வர்மன் – வானதி காதல், ஆதித்த கரிகாலர் கொண்ட நந்தினி மீதான காதலைச் சொல்லும்போது அவர் மனம் நிலைகொள்ளாமல் அலைவதன் அனுபவத்தை அதேபோல கேமரா வழியாகப் பார்வையாளர்களுக்கும் கடத்துவது, குந்தைவையும் நந்தினியும் நேருக்கு நேர் சந்திக்கும் தருணத்தைக் காட்சிப்படுத்தி இருப்பது அழகு.

காதல், சதி, போர் என விரியும் கதைக்கு ஜெயமோகனின் வசனங்கள், தோட்டாதரணியின் கலை, ரவி வர்மனின் ஒளிப்பதிவு, ஏகா லகானியின் ஆடைவடிவமைப்பு ஆகிய அனைத்தும் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான திரை அனுபவத்தை வழங்குகின்றன.

‘பொன்னி நதி’, ‘தேவராளன் ஆட்டம்’, ‘சோழா சோழா’ பாடல்கள் மற்றும் பின்னணி இசை என படம் முழுக்க ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ராஜ்ஜியம். ’பொன்னியின் செல்வன்’ கதையின் ஒவ்வொரு பாகத்திலும் வரும் கதை காட்சிகளைத் திரைமொழியாக்கலில் முன்பின்னாகக் கொண்டு வந்திருப்பது சில இடங்களிலும் சுவாரசியமாக இருந்தாலும் கதை படிக்காமல் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு குழப்பத்தையே தரும்.

அதேபோல, ஊமை ராணி கதாபாத்திரத்தை திரைக்கதையில் கொண்டு வந்ததும் அதை இறுதியில் வெளிப்படுத்தி இருந்த விதமும் சுவாரசியமே. படத்தின் ஆரம்பத்தில் வரும் போர்க்காட்சிகள், இறுதியில் வரும் கப்பல் காட்சிகள் என சில இடங்களில் சிஜி பணிகள் சொதப்பலாக அமைந்திருப்பது முக்கியமான குறை.

ஒட்டுமொத்தத்தில் முதல் பாதியில் மெதுவாக நகர்ந்து இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் கதையாக இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் -1’ பார்வையாளர்களுக்கு பெரிய ஏமாற்றம் தராத நல்லதொரு திரை அனுபவம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in