'பொன்னியின் செல்வன்’ போன்ற படத்தைக் கற்பனை செய்வதற்கே 10 வருடங்கள் ஆகும்’: நடிகர் கார்த்தி

'பொன்னியின் செல்வன்’ போன்ற படத்தைக் கற்பனை செய்வதற்கே 10 வருடங்கள் ஆகும்’: நடிகர் கார்த்தி

’பொன்னியின் செல்வன்’ போன்ற படத்தை கற்பனை செய்வதற்கு 10 வருடங்கள் ஆகும் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

கல்கியின் புகழ்பெற்ற ’பொன்னியின் செல்வன்’ நாவலை, மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தின் ’பொன்னி நதி’ என்ற முதல் பாடல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் கார்த்தி பேசும்போது கூறியதாவது: 'பொன்னியின் செல்வன்' நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி, ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டரில் ஜெயராம் சார் நடித்திருக்கிறார். ஆழ்வார்க்கடியான் நம்பி, ஐந்தரை அடி உயரம். ஆனால், ஜெயராம் ஆறரை அடி. ஐந்தரை அடியாக மாறுவதற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அந்த ரகசியத்தை இப்போது கூற மாட்டேன். ஆனால், அது கற்பனையிலும் நினைக்க முடியாதது. அவருடன் நாங்கள் நடித்தது ஆசிர்வாதம் தான்.

நதிகளில் தான் நாகரிகம் அடைந்தது. நாம் பரிணாம வளர்ச்சியடைந்ததும் நதியில் தான். அந்த காலத்தில் பொன்னி நதி என்று அழைக்கப்பட்டது. இன்று காவிரி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். ஒரு நதி இறுக்கமாகவும், வேகமாகவும் இருக்கும். இன்னொன்று மேலே மெதுவாக செல்லும். ஆனால், கீழே வீரியம் அதிகமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு குணங்கள் இருக்கிறது. நதிகள் கவிஞர்களை ஊக்குவித்தும், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்திருக்கின்றது.

பொதுவாக இந்தப் படத்தை எவ்வளவு போராடினாலும் எடுத்து முடிக்க முடியாது என்ற பலபேர் கூறினார்கள். நாங்கள் படத்தை ஆரம்பித்த பிறகு , கோவிட் வருகிறது. ஆனால், ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று எப்படி தெரியுமோ, அதுபோல மணி சாருக்கு இந்தப் படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியும் என்கிற நம்பிக்கை இருந்தது. நாங்கள் எல்லோரும் மணி சாருடன் இருந்து பணியாற்றினோம். 120 நாட்களிலேயே 'பொன்னியின் செல்வன் - 1' மற்றும் 'பொன்னியின் செல்வன் - 2' என இரண்டையும் முடித்துவிட்டார்.

120 நாட்களில் 2 படங்களை எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது, யாரும் நம்பமாட்டார்கள். ஜெயராம் சார் கூறியது போல விடியற்காலை 2.30 மணிக்கு மேக்கப் அப் போடுவதற்கு தயாராக இருப்போம். ஆனால், அதற்குமுன் எங்களுக்கு மேக்கப் போடுவதற்கு 30 பேர் தயாராக இருப்பார்கள். யாரும் அதிகளவில் தூங்கியதில்லை. புத்தகம் படித்துவிட்டு அதை நினைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றால், அதைவிட அழகாக, மணி சார் அதை உருவாக்கி வைத்திருப்பார். இப்படத்தில் பணியாற்றியது கனவு போல இருந்தது.

இதுபோன்று ஒரு படம் எடுப்பதற்கு புதிதாக ஒரு மனிதன் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும். இதுபோன்ற படத்தை எடுக்க வேண்டும் என்று கற்பனை செய்வதற்கு 10 வருடங்கள் ஆகும். ஆனால், மணி சாரால் மட்டுமே அதை செய்ய முடியும். இவ்வாறு நடிகர் கார்த்தி கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in