பூங்குழலி என்னைத் தேடி வந்தாள்!

’பொன்னியின் செல்வன்’ ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி
ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி

மருத்துவம் படித்து மருத்துவராகவும் பயிற்சி எடுத்துவிட்டு மலையாள சினிமாவுக்குள் நுழைந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த இவரை, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாக உலவ விட்டிருக்கிறார் மணிரத்னம். மலையாளம், தமிழ் தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவிலும் அடி வைத்திருக்கும் அவருடன் ஒரு சின்ன உரையாடல்:

மருத்துவம் படித்துவிட்டு நடிக்க வந்ததில் உங்கள் பெற்றோருக்கு வருத்தமில்லையா?

நிறைய வருத்தம் உண்டு இப்போதும்..! மணிரத்னம் சார் இயக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய படத்தில் நடித்த பிறகும் அம்மாவிடம் கேட்டால், “இப்படி சினிமாவில் நடிப்பதற்கா உன்னை டாக்டருக்குப் படிக்க வைத்தோம்” என்பார். நான் மருத்துவராகி, மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சையளிக்க வேண்டும், ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சிறு வயது முதலே சொல்லி வளர்த்தார் அம்மா. அவரின் வளர்ப்பாகத்தான் நான் இருந்தேன். ஆனால், மாடலிங் வாய்ப்புகள் வந்தபிறகு எனது தெரிவுகள் மாறிவிட்டன. இது தற்காலிகமானது தான். ஸ்டெதஸ்கோப் எப்போதும் என்னோடு இருக்கிறது. அதை நான் அம்மாவுக்காகவேணும் கீழே வைக்க மாட்டேன். அதேநேரம் விதியின் மீதும் நம்பிக்கை வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பு எப்படி அமைந்தது?

நான் மலையாளத்தில் நடித்து வெளியான ‘மாயநதி’ படம் பார்த்துவிட்டு மணிரத்னம் சார் என்னை சென்னைக்கு அழைத்துப் பேசினார். பய பக்தியோடு அவரைப்போய் சந்தித்தேன். ஏனென்றால் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். அதேபோல் கார்த்திக் சுப்பாராஜும் அழைத்து ‘மாயநதி’யில் எனது நடிப்பைப் பாராட்டினார். ‘மாயநதி’ எனக்கு இங்கே நிறைய கொடுத்திருக்கிறது.

மணி சார் என்னை முதலில் வானதி கதாபாத்திரத்துக்குத்தான் ஆடிஷன் வைத்து தேர்வுசெய்தார். ஆனால், நான் தேர்வான பிறகு, அவரது அறிவுரையின்படி பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கமான ஆங்கிலப் பதிப்பை வாசித்தேன். அதேபோல் பொன்னியின் செல்வன் திரைக்கதையும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டது. அதையும் வாசித்தேன். அப்போது நமக்குப் பூங்குழலி கேரக்டர் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அதைப்பற்றி மணி சாரிடம் கூற பயம்.

நாம் விரும்பியது நம்மைத் தேடிவரும் என்று சொல்வார்கள் இல்லையா? எனது விருப்பத்தை எப்படியோ தெரிந்துகொண்ட மணி சார், என்னை பூங்குழலி கதாபாத்திரத்துக்கு மாற்றிவிட்டதாக எனது கால்ஷீட் மேனேஜர் போன் செய்து சொன்னார். நான் அப்போது ‘ஜகமே தந்திரம்’ படப்பிடிப்பில் லண்டனில் இருந்தேன்.

படத்தில் நடித்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...

நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். கடலில் காற்றை எதிர்த்து படகு செலுத்தும் பெண்ணின் உடல்வாகு வலிமையாக இருக்க வேண்டும் என்றார் மணி சார். அதற்காக நான் ‘வொர்க் அவுட்’ செய்து உடலை ஸ்லிம் ஆக்கினேன். நீச்சல் கற்றுக் கொண்டேன். இவை அனைத்தையும் செய்வதற்கு எனக்கு 2 மாதம் மட்டுமே அவகாசம் இருந்தது. அதேபோல், பூங்குழலி கதாபாத்திரம் வரும் காட்சிகளின் ஸ்டோரி போர்ட் எனக்குக் காட்டப்ப்பட்டது. அதில் செக்ஸியாக இருப்பதைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தேன்.

“இந்தக் கேரக்டரை எவ்வாறு சித்தரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். அது நாகரிகமாகவே இருக்கும். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று மணி சார் சொன்னார். அவ்வாறே என்னை வார்த்திருக்கிறார்.

இதையெல்லாம்விட நான் அதிர்ந்தது 2020-ல் தாய்லாந்தில் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்குத்தான் முதல் ஷாட் வைத்தார் மணி சார். அப்போது நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் அருகில் இருந்து, “இது உன்னால் முடியும்... நீ அதிர்ஷ்டக்காரி அதனால்தான் உன்னை வைத்து முதல் ஷாட் எடுக்கிறார். தைரியமாகச் செய்” என்று ஊக்கம் தந்தார். அவர் மட்டும் முதல் நாள் படப்பிடிப்பில் என் அருகில் இல்லாமல் போயிருந்தால்... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது படத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியின் அளவைப் பார்க்கும்போது ஐந்து நாட்களாகவே மகிழ்ச்சியில் எனக்குத் தூக்கம் வரமறுக்கிறது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’ மலையாளப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருந்தீர்கள் அல்லவா?

ஆமாம்! எனக்குச் சற்று முன்னதாகவே வந்துவிட்டப் பெண் மையக் கதாபாத்திரம். பெரிய அளவில் போகவில்லை என்றாலும் படத்தைத் தயாரித்தவர் களுக்கு நஷ்டமில்லை. அந்தப் படத்தில் கொஞ்சம் முதிர்ச்சியான பெண்ணாக நடித்தேன். ‘ஜகமே தந்திரம்’ படத்திலும் முதிர்ச்சியான பெண் தான். அக்டோபர் 19-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தெலுங்குப் படமான ‘அம்மு’விலும் பெண் மையக் கதாபாத்திரம் ஏற்றுள்ளேன். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணாக, அதிலிருந்து மீண்டு எழுபவளாக நடித்துள்ளேன். அடுத்து வெளிவரவிருக்கும் ‘குமரி’ படத்திலும் கிட்டத்தட்ட இதே சாயல் கொண்ட கதாபாத்திரம் என்றாலும் இதுவொரு த்ரில்லர்.

ஒரு பக்கம் நடித்துகொண்டே ‘கார்கி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறீர்களே..?

ஆமாம்! இன்று பெண்களின் பங்களிப்பு சினிமாவுக்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது. தயாரிப்பாளர்களில் ஒருவாராக நான் அப்படத்தில் பங்கேற்றதிலும் ஒரு சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்கு எவ்வளவு சமூகப் பொறுப்பு தேவைப்படுகிறது என்பதைக் காட்டியதிலும் அது எனக்கு முக்கியமான படம்தான். கௌதம் ராமச்சந்திரன், அனந்த பத்மநாபன், சாய் பல்லவி போன்ற திறமையாளர்களால் அந்தப் படம் சாத்தியமாகியது. இதுபோல் இன்னும் நிறைய பங்கெடுப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in