`பொன்னியின் செல்வன்' இன்னும் இரண்டு நாளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவரின் மனநிலையில் இருக்கிறோம் என்று சென்னை திரும்பிய படத்தின் நடிகர்கள், நடிகை கூறினர்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிட்டது படக்குழு. படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. படம் இன்னும் 2 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நடிகர் கார்த்தி, நடிகர் ஜெயம் ரவி, நடிகை த்ரிஷா ஆகியோர் இன்று சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சோழர் வரலாற்றையும், பொன்னியின் செல்வன் நாவலையும் படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆங்கில திரைப்படங்களோடு ஒப்பிட வேண்டாம். படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவரின் மனநிலையில் இருக்கிறோம்" என்றனர்.