பொங்கல் பண்டிகையும், எம்ஜிஆர் படங்களுமாக கொண்டாடிய தமிழ்நாடு!

எம்ஜிஆர் திரைவாழ்வும் பொங்கல் ரீலீஸ் படங்களும்!
பொங்கல் பண்டிகையும், எம்ஜிஆர் படங்களுமாக கொண்டாடிய தமிழ்நாடு!

எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகி எத்தனையோ வருடங்களாகிவிட்டன; உலகை விட்டு மறைந்தும் பல வருடங்கள் ஓடிவிட்டன. ஆனபோதும் இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் எனர்ஜி பூஸ்ட்டராக, வைட்டமினாக திரையுலகிற்கும் ரசிகர்களும் போஷாக்குகளை வாரி வழங்கிய பாஸிட்டிவ் எனர்ஜிக்கு சொந்தக்காரர். திரையுலகிலும் அரசியலிலும் எம்ஜிஆர் படைத்த வரலாறே தனி! எம்ஜிஆர் எனும் மூன்றெழுத்து தரும் உற்சாகமும், உத்வேகமும் அலாதியானது.

முப்பதுகளின் இறுதியில் நடிக்க வந்த எம்ஜிஆருக்கு, ஆரம்பத்தில் கிடைத்ததென்னவோ சின்னச் சின்ன வேடங்கள்தான். அப்படி வந்த படங்களில், ’ஹரிச்சந்திரா’ எனும் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹரிச்சந்திராவா? கேள்விப்பட்டதே இல்லையே என்று இந்தத் தலைமுறையினர் நினைக்கலாம்.

ஆமாம். ’ஹரிச்சந்திரா’ படம் தெரியுமே என்பவர்களும் உண்டு. ஆனால் இதுமாதிரி பல ’ஹரிச்சந்திரா’க்கள் இதே தலைப்பில் படங்களாக வந்துள்ளன. அந்தப் பத்தோடு இதுவும் ஒன்று. ஆனால், எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில், இந்தப் படம்தான் முதல் பொங்கல் ரிலீஸ். 14.1.1944 அன்று வெளியானது.

பிறகு 1956ம் ஆண்டு எம்ஜிஆர் வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டு, தமிழ் சினிமா உலகத்திற்கும் கூட மறக்கமுடியாத ஆண்டாக சரித்திரம் குறித்துவைத்திருக்கிறது. ஜனவரி 14ம் தேதி 1956ம் ஆண்டு பொங்கலின் போது ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ வெளியானது. இந்தப் படம் தமிழின் முதல் கலர் படம். கேவா கலரில் தயாரிக்கப்பட்டது. எம்ஜிஆருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த முக்கியமான படம்.

அதையடுத்து அடுத்த வருடமே பொங்கலுக்கு(18.1.57) எம்ஜிஆர் நடித்த ’சக்கரவர்த்தி திருமகள்’ திரைப்படம் வெளியானது. எம்ஜிஆரின் நடிப்பிலும் கலைவாணரின் நகைச்சுவையிலும் பாடல்களின் தாக்கத்திலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்!

இதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து 1962ம் ஆண்டு பொங்கல் நன்னாளில் ’ராணி சம்யுக்தா’ வெளியானது. இதன் பிறகு எம்ஜிஆரும் அவரது தயாரிப்பாளரும் என்ன நினைத்தார்களோ? வரிசையாக பொங்கல்தோறும் வெளியாக ஆரம்பித்தன.

1963ம் ஆண்டு எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ’பணத்தோட்டம்’ ரிலீஸானது. எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 1964ம் ஆண்டு, தேவர்பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர், சாவித்திரி நடித்த ’வேட்டைக்காரன்’ படமும் பொங்கல் திருநாளில் வெளியானது. ’உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ பாடல், இப்போதும் வைட்டமின் பாடலாக, வரிகளாக, நம் காலர் டியூனில் இடம்பிடித்து, நமக்கு உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது!

1965ம் ஆண்டு, எம்ஜிஆர் இருவேடங்களில் நடித்த, ’எங்க வீட்டு பிள்ளை’ பொங்கலுக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டது. இதுவரை வந்த எம்ஜிஆரின் பொங்கல் ரிலீஸ் படங்களில், ‘எங்க வீட்டு பிள்ளை’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தமிழ்த் திரையுலக வரலாற்றில், ஏழு தியேட்டர்களில் வெள்ளிவிழா எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம்தான்! எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில், இந்தப் படம் எம்ஜிஆரை அடுத்தக்கட்டத்துக்கு உயரத்திச் சென்றது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ எனும் பாடல், அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்தது.

1966ம் அண்டு ஏவிஎம் தயாரிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான ’அன்பே வா’வும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ’எம்ஜிஆர் ஃபார்முலா’ என்பதை இன்று வரை எல்லோரும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு படம் செய்து வருகிறார்கள். ஆனால் ஏவிஎம், எம்ஜிஆர் ஃபார்முலாவையெல்லாம் அப்படியே தள்ளி, ஓரமாக வைத்துவிட்டு, துள்ளவைக்கும் காதல் கதையை எடுத்து, எம்ஜிஆராலேயே மறக்கமுடியாத படமாகக் கொடுத்தார்கள்.

மேலும் ஏவிஎம் நிறுவனம், எம்ஜிஆரை வைத்துத் தயாரித்த ஒரே படம் ’அன்பே வா’! சரோஜாதேவி, நாகேஷ், மனோரமா, அசோகன் எனப் பலரும் நடித்திருந்தார்கள். எல்லாப் பாடல்களும் பலாச்சுளைத் தித்திப்பு!

1967ம் ஆண்டு பொங்கலுக்கு வந்த (ஜனவரி 13ம் தேதி) தாய்க்குத் தலைமகன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1968ம் ஆண்டு வந்த பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ’ரகசிய போலீஸ் 115’ திரைப்படமும் நல்லதொரு வெற்றியை அடைந்தது.

’எங்க வீட்டு பிள்ளை’க்கு அடுத்து 1970ம் ஆண்டு பொங்கல் நாளில், இரட்டை வேடங்களில் நடித்த ’மாட்டுக்கார வேலன்’ அடைந்த வெற்றி, மிகப்பெரிய வரலாறு!

இதன் பிறகு இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ’உரிமைக்குரல்’, பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 7ம் தேதி 1974ம் ஆண்டு வெளியாகி, சூப்பர்டூப்பர் வெற்றியைத் தந்தது.

திமுகவில் இருந்து விலக்கப்பட்டதும் தனிக்கட்சி தொடங்கியதும் வெற்றிக்கனியைச் சுவைத்ததும் என அரசியலில் எம்ஜிஆரின் சாம்ராஜ்ஜியம் உருவான தருணம் அது. அப்போதும் எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்தார். அமோக வெற்றி பெற்று உடனடியாக ஆட்சி அமைக்க முடியாமல், ஷூட்டிங் இருந்ததால், அவசரம் அவசரமாக படத்தை முடித்துக் கொடுத்தார். அதன் பிறகே ஆட்சியில் அமர்ந்தார். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அப்படி எம்ஜிஆர், அவசரம் அவசரமாக நடித்துக்கொடுத்த கடைசிப்படம் ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. படத்தின் இயக்குநர் பி.ஆர்.பந்துலு படப்பிடிப்பின் இடையிலேயே பு நடந்துகொண்டிருக்கிற பாதி வேளையிலேயே இறந்துவிட்டார். மீதம் படத்தை, இயக்குநர் ப.நீலகண்டனை வைத்து இயக்கி முடித்தார் எம்ஜிஆர். இன்றைக்கும் இந்தப் படத்தின் டைட்டிலில் ’டைரக்‌ஷன் எம்ஜிஆர்’ என்று வருவதைப் பார்க்கலாம்!

1978ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளுக்கு வெளியான ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படம், எம்ஜிஆரின் பொங்கல் ரிலீஸ் படங்களில் கடைசிப்படம் மட்டுமல்ல. எம்ஜிஆரின் திரையுலக வாழ்வின் கடைசிப்படமும் கூட! தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர்.பந்துலுவுக்கு இதுவே கடைசிப்படமானது! இந்தப் படத்தில் எம்ஜிஆர் நடிக்கும்போது அவருக்கு 61 வயது!

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வெளியாகி, 45 ஆண்டுகளாகின்றன. எம்ஜிஆருக்கு நூற்றாண்டு கடந்தும் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம். இன்னும் நூறாண்டுகளானாலும் எம்ஜிஆரைப் புகழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அதுதான் எம்ஜிஆர் எனும் மூன்றெழுத்தின் ரகசிய அதிசயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in