ஓரினச் சேர்க்கையாளர்களா? ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் மீது போலீசில் புகார்
விவேக் அக்னிகோத்ரி

ஓரினச் சேர்க்கையாளர்களா? ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் மீது போலீசில் புகார்

போபாலைச் சேர்ந்தவன் என்று சொன்னால், ஓரினச் சேர்க்கையாளர் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படும் என்று கூறிய ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில், 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டப்பட்டனர். இதனால், லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர். அப்போது, நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் உயிர்பயத்துடன் வெளியேறிய சம்பவங்களை கொண்டு, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் இந்தியில் உருவாகி இருக்கிறது.

விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பாஜக ஆளும் சில மாநிலங்கள் வரிச்சலுகை அளித்துள்ளன. வசூலிலும் இந்தப் படம் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் அக்னிகோத்ரி அளித்த பேட்டி ஒன்றில், சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்தார். அதாவது, “நானும் போபாலைச் சேர்ந்தவன்தான். ஆனால், நான் போபாலி என்று வெளியில் சொல்ல மாட்டேன். அப்படி சொல்வதில் வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. யாராவது தன்னை போபாலி என்று அழைத்தால், அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்று பொதுவாக பொருள் கொள்ளப்படும். ஒருவேளை, அவர்களின் நவாப் ஸ்டைல் வாழ்க்கை முறையால் கூட அதுபோன்ற எண்ணம் வந்திருக்கலாம்” என்று கூறியிருந்தார்.

விவேக் அக்னிகோத்ரி
விவேக் அக்னிகோத்ரி

அவரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு உருவானது. விவேக் அக்னிகோத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என மத்தியப் பிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், விவேக் அக்னிகோத்ரி மீது மும்பையில் வெர்சோவா போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் வசிக்கும் போபாலைச் சேர்ந்த ரோகித் பாண்டே என்பவர் இந்தப் புகாரை கொடுத்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in