'அதையும், இதையும் ஒப்பிட்டுப் பேசுவதா?': நடிகை  சாய் பல்லவி மீது பஜ்ரங் தளம் போலீஸில் பரபரப்பு புகார்!

'அதையும், இதையும் ஒப்பிட்டுப் பேசுவதா?': நடிகை சாய் பல்லவி மீது பஜ்ரங் தளம் போலீஸில் பரபரப்பு புகார்!

நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராணா, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படம், ’விராட பர்வம்’. வேணு உடுலா இயக்கியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. படம் பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை சாய் பல்லவி ஒரு கேள்விக்கு பரபரப்பு பதிலளித்தார்.

அதில், "காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் பண்டிட்டுகள் அந்தக் காலத்தில் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். இதை மத மோதலாக எடுத்துக்கொண்டால், சமீபத்தில் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியரை கும்பலாகத் தாக்கி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டதை என்னவென்று சொல்வீர்கள்? அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

சாய் பல்லவியின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் நடிகை சாய் பல்லவி மீது ஹைதராபாத் சுல்தான் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், "காஷ்மீர் பயங்கரவாதிகளையும் பசு பாதுகாவலர்களையும் சமம் என்ற நோக்கில் சாய் பல்லவி பேட்டியளித்துள்ளார். அவர் மீதும், 'விராட பர்வம்' பட இயக்குநர் வேணு உடுகுலா மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in