
29 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில் முறையற்ற ஏற்பாடுகள் காரணமாக பார்வையாளர்கள் சங்கடங்களை அனுபவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்களுக்கான பணமும் திருப்பிக் கொடுக்கும் பணியும் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாட்டில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மாநாடு நடத்த சரியான இடம் மற்றும் அனுமதி கிடைக்காததால் ரஹ்மான் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது.
நிகழ்ச்சிக்காக ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ.29.50 லட்சத்தை திரும்பப் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் முன்பணத்தை பெற்றுக்கொண்ட ரஹ்மான் திருப்பி தரவில்லை என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் தரப்பட்ட காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.