கவிஞர் சினேகனை பதறவைத்த சின்னத்திரை நடிகை: காரணம் என்ன?

கவிஞர் சினேகனை பதறவைத்த சின்னத்திரை நடிகை: காரணம் என்ன?

சினேகம் பவுண்டேசன் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வரும் சின்னத்திரை நடிகை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆட்டோகிராப், ஆடுகளம் உட்பட பல தமிழ் திரைப்படங்களுக்கு பாடல் எழுதி பிரபலமானவர் கவிஞர் சினேகன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவிஞர் சினேகன் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "கடந்த 2015-ம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறேன்.

இந்த அறக்கட்டளையை முறையாக பதிவு செய்துள்ளேன். இந்த அறக்கட்டளையை வருமானவரித்துறை அங்கீகரித்து அனுமதி வழங்கியுள்ளது. சமீப காலமாக இணையதளங்களில் தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி சிலர் பணம் வசூலிப்பதாக எனது நண்பர்கள் மற்றும் வருமான வரித்துறை மூலம் தகவல்கள் கிடைக்கப்பெற்று உடனே இணைதளத்தில் சென்று பார்த்த போது சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

நடிகை ஜெயலட்சுமி செய்த சில மோசடிகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பார்த்தேன். தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்த கூடாது என்று தனது வழக்கறிஞர் மூலம் ஜெயலட்சுமி பதிவிட்ட விலாசத்திற்கு நோட்டீஸ் அனுப்பியபோது அது பொய்யான விலாசம் என நோட்டீஸ் திரும்பி வந்து விட்டது. இவ்வாறு தன் அறக்கட்டளை பெயரில் போலியான அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வரும் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த சினேகன், கடந்த 2015-ம் ஆண்டு முதல் சினேகம் பவுண்டேஷன் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறேன். சமீபத்தில் இணையதளங்களில் தனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது சமூக வலைதளப்பக்கத்தில் சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. முறைப்படி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்று தனது சொந்த செலவில் சினேகம் பவுண்டேஷன் நடத்தி வருகிறேன். போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு வரும் நடிகை மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும். வேறு யாரேனும் நடிகை ஜெயலட்சுமி பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in