தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள்! - நடிகை மீனா உருக்கம்

கணவருடன் மீனா...
கணவருடன் மீனா...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று முன் தினம் நுரையீரல் பாதிப்பு காரணமாக காலமானார். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழக்க நேரிட்டது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சைதாப்பேட்டையில் உள்ள மீனாவின் இல்லத்தில் வித்யாசாகருக்கான இறுதி சடங்குகள் நடந்தன.

இந்த நிலையில், வித்யாசாகரின் இறப்பு குறித்து பலரும் பலவிதமான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில், மீனா தனது கணவரின் இறப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், 'என்னுடைய அன்பு கணவர் வித்யாசாகரின் மரணம் என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கடினமான சூழலில் எங்கள் ப்ரைவசியை மதிக்க வேண்டும் என நான் அனைத்து மீடியாவுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன்.

என் கணவர் இறப்பில் இதற்கு மேலும் தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். இந்த கடினமான சூழ்நிலையில் எனக்குப் பக்கபலமாக நின்று என் குடும்பத்திற்கு உதவிய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

அதேபோல, சாகருக்கு மருத்துவம் செய்த, சிறந்த மருத்துவம் கொடுக்க முயற்சித்த மருத்துவ குழுவிற்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நமது முதலமைச்சர், ஹெல்த் மினிஸ்டர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடன் வேலைசெய்தவர்கள், என் குடும்பம், என் நண்பர்கள், இந்த சூழலில் அன்பையும் பிரார்த்தனைகளையும் தந்த எனது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி' என உருக்கமாக தெரிவித்திருக்கிறார் மீனா.

மீனாவின் இந்த பதிவைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in