ஜிக்கி: உலவும் தென்றல் காற்றில் மிதக்கும் இளம் குரல்!

இன்று பின்னணிப் பாடகி ஜிக்கியின் 87-வது பிறந்தநாள்
பின்னணிப் பாடகி ஜிக்கி
பின்னணிப் பாடகி ஜிக்கி

’ஞானசெளந்தரி’ என்கிற திரைப்படத்தில், பால ஞானசெளந்தரிக்காக, ‘அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்பஜோதியே’ என்ற பாடலை ஜிக்கி பாடினார். இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில், 1948-ல், திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி, அவர் பாடிய முதல் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடியபோது அவருக்கு 11 வயது. அந்த மாதாவின் அருளாலும் ஆதியின் அருளாலும் அவரின் கடைசிப் பாடல் வரை அந்தக் குரல் மாறவே இல்லை. அதே மழலைக் குரலில் கொஞ்சிக்கொஞ்சிப் பாடி, நம்மை வசீகரித்தார் ஜிக்கி.

என்றும் இனிமை குன்றாத குரல்

ஆந்திர மாநிலம் சந்திரகிரிதான் ஜிக்கியின் சொந்த ஊர். அப்பாவின் பெயர் கஜபதி நாயுடு. அம்மா ராஜகாந்தாவுக்கு சென்னைதான் பூர்விகம். எனவே இந்தப் பக்கம் தமிழும் தெரியும். அந்தப் பக்கமுள்ள தெலுங்கும் தெரியும். ஐந்து வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்ட ஜிக்கி, முறையான சங்கீதத்தை அப்போதே கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார். அப்போது அவரது குரலைக் கேட்டவர்கள், ‘மழலைக் குரல் மாறாமல் இருக்கிறதே...’ என்று பாராட்டாகவும் சொன்னார்கள். குறையாகவும் விமர்சித்தார்கள்.

பின்னர் ஜிக்கி 11 வயது சிறுமியாக இருந்தபோது அவரது தாய்மாமா சிட்டிபாபு, எஸ்.வி.வெங்கட்ராமனிடம் அழைத்துச் சென்று பாடிக்காட்டச் சொன்னார். அந்தக் குரல் எஸ்.வி.வி-க்கு ரொம்பவே பிடித்துப் போனது. அப்படித்தான் ’ஞானசெளந்தரி’யில் ஜிக்கி பாடகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் வரிசையாகப் பாடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருந்தன. ‘தியாகையா’ என்ற தெலுங்குப் படத்தில் ஜிக்கியின் பாடலைக் கேட்டு உருகிப் போனார்கள் ரசிகர்கள். ’பந்துலும்மா’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல், படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பலமாக அமைந்தது.

இசைமேதை ஜி.ராமநாதன், ஜிக்கியின் குரலைக் கேட்டார். ‘யார் இந்தப் பொண்ணு? கூட்டிட்டு வாங்கப்பா’ என்று ஆள் அனுப்பினார். ஜிக்கியும் வந்தார். ‘ரொம்ப நல்லாப் பாடுறியேம்மா. உன் குரல்ல ஏதோவொரு சக்தி இருக்கு’ என்று சொல்லி, தன் இசையில் பாடவைத்தார். 1950-ம் ஆண்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில், ஜி.ராமநாதன் இசையில் ஜிக்கியும் திருச்சி லோகநாதனும் பாடினார்கள். திருச்சி லோகநாதன் தான், தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர் எனும் பெருமைக்கு உரியவர்.

‘உலவும் தென்றல் காற்றினிலே...’ என்று ஜிக்கி பாட... அவரின் குரல், ஒரு தென்றலைப் போல் தவழ்ந்துவந்து, தமிழ் சினிமா ரசிகர்களின் செவிப்பறைக்குள் புகுந்துகொண்டது. 70 வருடங்களையெல்லாம் கடந்த பிறகு இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிற ஐஸ்க்ரீம் குரல் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸில், கதை முடிவின் பரபரப்புகளையும் கடந்து, ‘வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகுதூரமில்லை... நீ வாராய்’ என்கிற குரலில் இன்னும் பாடலுடன் ஐக்கியமானார்கள் எல்லோரும்.

இந்தப் பாடல்களுக்குப் பிறகு ஜிக்கி பாடாத இசையமைப்பாளர்களே இல்லை. ஐம்பதுகளில் தொடங்கி அறுபதுகள் வரைக்கும் ஜிக்கியின் பாட்டு ராஜாங்கம் பவனி வந்தது. அவரது குரல் ஒலிக்காத ஊர்களே இல்லை. பாட்டுப்புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவரின் பாடல்களைப் பாடி மகிழ்ந்த பெண்கள் நிறையபேர் உண்டு.

ஜிக்கி, தான் பாடிய எல்லா பாடல்களுக்கும் தன் தனித்துவக் குரலால் அழகு சேர்த்திருப்பார். ஜீவன் ஊட்டியிருப்பார். படம் விட்டு வெளியே வரும்போது, ஜிக்கியின் பாடல்களை சிலாகித்தபடி சென்றது ரசிகக் கூட்டம். ஜிக்கியின் உச்சரிப்பையும் அதில் கொஞ்சுகிற த்வனியையும் பத்திரிகைகள் பாராட்டின.

ஜிக்கி, ஏ.எம்.ராஜா
ஜிக்கி, ஏ.எம்.ராஜா

1952-ல், திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசையில், ’குமாரி’ எனும் படத்தில் ஜிக்கி பாடினார். அப்போது அவர் குமரியாகிவிட்டிருந்தார். இந்த முறை அவருடன் பாடியவர் அப்படியொரு குழையும் குரலில் சொந்தக்காரர். ஒரு வெண்ணெய் வழிந்தோடினால் எப்படி இருக்குமோ அப்படியொரு குரலுக்குச் சொந்தக்காரரான ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார். ஜிக்கி குரலின் இனிமையும் ஏ.எம்.ராஜாவின் குரலின் கனிவுத்தன்மையும் அழகுறப் பொருந்தின. அதேபோல் இருவருக்குள்ளும் காதலும் மலர்ந்தது.

ஒருகட்டத்தில், ஜிக்கியும் ஏ.எம்.ராஜாவும் பாடினால்தான் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று இசையமைப்பாளர்கள் கருதினார்கள். இயக்குநர்களும் ஆமோதித்தார்கள். ‘ஆஹா ஆஹா’ என்று ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஏகப்பட்ட பாடல்களை ஜோடியாகப் பாடினார்கள் இருவரும். அனைத்துமே அனைவரையுமே கவர்ந்த பாடல்களாக அமைந்தன.

’நாடோடி மன்னன்’ படத்தில் ‘மானைத்தேடி மச்சான் வரப்போறான்’ என்ற பாடல் படத்தில் தனியழகுடன் வசீகரித்தது. ’மயக்கும் மாலைப்பொழுதே நீ போ...போ இனிக்கும் இன்ப நிலவே நீ வா...வா’ என்று ஜிக்கி பாட, அந்த நிலவு விடியும் வரை இருந்துவிட்டு பாடலை ரசித்துவிட்டு, பிரிய மனமே இல்லாமல் ரசித்துக் கேட்டுச் சென்றது.

’இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே...’ என்கிற பாடலைக் கேட்டு, நதிகளும் ஆறுகளும்கூட உணர்ச்சிப்பெருக்கெடுத்து சலனமின்றி நின்று நிதானித்து ஓடியிருக்குமோ என்னவோ? ’உள்ளம் ரெண்டும் ஒன்று நம் உடல்கள்தானே ரெண்டு’ என்ற பாடலில் காதலைத் ததும்பத்ததும்பக் கொடுத்திருப்பார் ஜிக்கி.

’துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்’ என்ற பாடலில், ஜிக்கியின் தாலாட்டுக் குரலைக் கேட்டு நம் துக்கங்களையும் தூர எறிந்துவிட்டு இளைப்பாறிக் கொள்வோம். ’யாரடி நீ மோகினி’ என்ற பாடலில் டிஎம்எஸ் வித்தை காட்டியிருப்பார். ஜிக்கி நம்மை மயத்திலேயே ஆழ்த்திவிடுவார். ஜிக்கியின் குரலில் உள்ள மெஸ்மரிஸம் கேட்டவர்களையெல்லாம் அவர் பக்கம்... அவரின் குரல்பக்கம் இழுத்துக்கொண்டது.

இப்படி எத்தனையெத்தனையோ பாடல்கள். ஜிக்கியின் குரலில் சொக்கித்தான் போனோம். இளையராஜா இசையில், ‘வண்ண வண்ணச் சொல்லெடுத்து வந்ததிந்த...’ என்று ‘செந்தமிழ்ப்பாட்டு’ படத்தில் பாடினார். எண்பதுகளின் ரசிகர்களையும் இந்தக் குரல் தன்வசப்படுத்திக்கொண்டது. ‘பாட்டுக்கு ஒரு தலைவன்’ படத்தில் மனோவுடன் சேர்ந்து ‘நினைத்தது யாரோ நீதானே... தினம் உன்னைத்தேடும் நாள்தானே’ என்று பாடிய பாட்டு, மிகப்பெரிய ஹைலைட் பாடலாக, காதல் பாடலாக இன்றைக்கும் ஹிட் வரிசையில் அமர்ந்துகொண்டிருக்கிறது.

’கொக்கரக் கொக்கரக்கோ சேவலே’ என்றும் பாடி குதூகலப்படுத்தினார்.

’ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்/ உள்ளமெங்கும் தேடினேன்

உறவினை கண்டேன்/ அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினை கண்டேன்/

கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ/ என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ/ இன்று கண்கலங்க நின்றிருந்தேன் சேதி வந்தது/ நான் கடந்து வந்த வானில் விடிவெள்ளி முளைத்தது / ஊரெங்கும் தேடினேன் ஒருவரை கண்டேன்/

வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம்/ வாழ்க என்று நீங்கள்

சொன்னால் வாழும் என் மனம்/ இல்லை மறைக என்று வரம்

கொடுத்தால் மறைய சம்மதம்

- என்று தன் குரலால் நம்மை ஆட்சி செய்த ஜிக்கி 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி மறைந்தார்.

1935 நவம்பர் 3-ம் தேதி பிறந்த ஜிக்கியின் 87-வது பிறந்தநாள் இன்று. ‘வாராய் நீ வாராய்...’ என்றும் ‘உலவும் தென்றல் காற்றினிலே’ என்றும் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலில், ஜிக்கி வாழ்ந்துகொண்டே இருப்பார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in