பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்!

பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கூறி அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம், சட்டப்பிரிவு 142-ல் தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இதனை வரவேற்று தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி’ என அற்புதம்மாளை குறிப்பிட்டு பேரறிவாளன் விடுதலையானதற்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’31 ஆண்டுகள் போராடி ஒரு தர்மத்தாய் வெற்றி பெற்றார்’ என பேரறிவாளன் படத்துடன் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இயக்குநரும் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, ‘முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறை முடக்கம். தாயின் போராட்டம் எல்லாம் இன்று முடிவிற்கு வந்துள்ளது. இன எழுச்சி நாளில் தமிழ்ப் பிள்ளைகளுக்கு கிடைத்த இனிப்பான செய்தி அண்ணன் பேரறிவாளனின் விடுதலை. நீதியை நிலை நாட்டிய உச்ச நீதிமன்றத்திற்கும், சட்ட வல்லுநர்களுக்கும் நன்றி’ என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் தனது வாழ்த்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், "தம்பி பேரறிவாளனின் விடுதலை செய்தி மகிழ்ச்சியை தருகிறது. அற்புதம்மாள், பேரறிவாளனின் தந்தை மற்றும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறேன். பேரறிவாளன் விடுதலைக்கு காரணமாக இருந்த தமிழக அரசுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் எனது நன்றியும் வணக்கங்களும். பல வருடங்களாக அறிவின் விடுதலைக்காக போராடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் தொடர்ந்து போராடிய வழக்குரைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீதிக்கு இது ஒரு போராட்டம். நிச்சயம் உலகம் இதை பாராட்டும்’ என தெரிவித்துள்ளார்.

இவர்கள் தவிர இணையத்தில் பலரும் பேரறிவாளன் விடுதலை குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in