'நடிகர் விஷால் வீட்டின் மீது ஏன் கல் வீசினோம்?':பிடிபட்ட பொறியாளர் உள்ளிட்டோர் பரபரப்பு வாக்குமூலம்

'நடிகர் விஷால் வீட்டின் மீது ஏன் கல் வீசினோம்?':பிடிபட்ட பொறியாளர் உள்ளிட்டோர் பரபரப்பு வாக்குமூலம்
Classic

குடிபோதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கற்களை வீசி தாக்கி கொண்ட போது நடிகர் விஷால் வீட்டின் மீது கல் பட்டதாக போலீஸார் பிடியில் சிக்கிய நான்கு பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தமிழ் திரையலகில் முன்னணி நடிகரான விஷால், சென்னை அண்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 26-ம் தேதி நள்ளிரவு திடீரென விஷால் வீட்டின் முதல் மாடியில் இருந்த கண்ணாடி மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். உடனே வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் விஷால் வீட்டின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து நடிகர் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து கண்ணாடியை உடைத்த நபர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் நான்கு நபர்களை இன்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மீன் ஏற்றுமதி தொழில் செய்யும் கொளத்தூரைச் சேர்ந்த ப்ரவீன் குமார்(29), ராஜேஷ்(29) மற்றும் அண்ணாநகரைச் சேர்ந்த ஒட்டல் உரிமையாளர் சபரீஸ்வரன்(29), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மணிரத்னம்(28) என்பது தெரியவந்தது.

நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் சம்பவத்தன்று ஒன்றாக காரில் சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையில் வீட்டிற்கு வரும் வழியில் திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. விஷால் வீட்டருகே வரும் போது தகராறு முற்றி ஒருவரையொருவர் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு கல் தெரியாமல் நடிகர் விஷால் வீட்டு கண்ணாடியில் பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் கூறுவது உண்மையா என நான்கு பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in