'தொடர்ந்து வந்து நிம்மதியைக் கெடுக்கிறாங்க சார்': பிரபல நடிகை போலீஸில் பரபரப்பு புகார்

'தொடர்ந்து  வந்து நிம்மதியைக் கெடுக்கிறாங்க சார்': பிரபல நடிகை போலீஸில் பரபரப்பு புகார்

தனது நிம்மதியை சிலர் கெடுப்பதாக பிரபல நடிகை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். மைசூரைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ’கௌரவம்’, ’அயோக்யா’, ‘க.பெ.ரணசிங்கம்’, ’வீட்ல விசேஷம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகரும், பழம்பெரும் நடிகை விஜயநிர்மலாவின் மகனுமான நரேஷை, மூன்றாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

நடிகர் நரேஷ், தமிழில், ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ’சண்டமாருதம்’, ’மாலினி 22 பாளையங்கோட்டை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை திருமணம் செய்துள்ள இவர், மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதியிடம் இப்போது விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்

இந்நிலையில், தனக்கும் பவித்ராவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகப் பரவும் தகவலை நடிகர் நரேஷ் மறுத்துள்ளார். நடிகை பவித்ரா லோகேஷும் அதை மறுத்துள்ளார். ’நாங்கள் இருவரும் நண்பர்கள். மற்றபடி எங்களுக்குள் ஏதுமில்லை’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே பவித்ரா லோகேஷ், மைசூரு வி.வி.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், " சில ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், தன்னைத் தொடர்ந்து பின் தொடர்வதாகவும், தனது நிம்மதியைக் கெடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார். இப்புகாரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சைபர் கிரைம் போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, தனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்குகளை உருவாக்கி தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதாக கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸில் புகார் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in