வார்த்தைப் பூக்களால் பாமாலை சூட்டிய பா.விஜய்!

கவிஞர் பா.விஜய் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
கவிஞர் பா.விஜய்
கவிஞர் பா.விஜய்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். பாடலின் ஏதோவொரு அம்சம் ஈர்த்து, அந்தப் பாடலுடன் நம்மைப் பயணிக்கவைக்கும். நம்முடைய பயணத்தில் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும். எங்கோ ஒருவிழாவில், அந்தப் பாடலை ஒலிபரப்பினால், அடுத்த ஆறேழு நாட்களுக்கு அந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருப்போம். அப்படியான பல பாடல்களைக் கொடுத்தவர்களில் தனியிடம் பிடித்தவர் கவிஞர் பா.விஜய்.

கோவையைச் சேர்ந்தவர். அப்பா ஸ்பின்னிங் மில்லில் மாஸ்டர். அம்மா பள்ளி ஆசிரியை. ஜெயங்கொண்டம் பக்கமுள்ள கிராமம்தான் சொந்த ஊர் என்றாலும் கோவைக்கு எப்போதோ வந்துவிட்டார்கள். அம்மா டீச்சர் என்பதால், வீட்டிலும் டீச்சராக இருந்து விஜய்க்குக் கண்டிப்புக் காட்டினார். அவரும் படிப்பில் படுகெட்டியாக இருந்தார். இளங்கலை, முதுகலைப் பட்டமெல்லாம் வாங்கினார். பள்ளிப்பருவத்தில் இருந்தே தமிழின்பால் கொண்ட காதலால், நிறைய வாசிக்கத் தொடங்கிய விஜய், ஒருகட்டத்தில் எழுதவும் ஆரம்பித்தார்.

எழுதியதை பத்திரிகைக்கு எப்படி அனுப்புவது எனும் முறை கூட தெரியாமல் இருந்தார். நண்பர்கள் தூண்டுதலால், இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் நடத்தி வந்த ‘பாக்யா’ பத்திரிகைக்குக் கவிதைகளை அனுப்பிவைத்தார். கவிதைகளைப் படித்த பாக்யராஜ், ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ விஷயம் இருக்கே...’ என்று யோசித்தார். தொடர்ந்து ’பாக்யா’வில் விஜய்யின் கவிதைகளைப் பிரசுரித்தார்.

பா.விஜய்
பா.விஜய்

இதையடுத்து விஜய்யை வரச்சொன்ன பாக்யராஜ், மெட்டுக்குப் பாட்டு எழுதச் சொன்னார். அந்த சந்தத்துக்குள் கட்டுப்படுகிற வார்த்தைகளை விஜய் வெகு லாவகமாகக் கையாண்டு கவனம் ஈர்த்தார். அப்படித்தான் ‘ஞானப்பழம்’ படத்தில் பாடலாசிரியராக பா.விஜய்யை அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ்.

பா.விஜய், பாடலாசிரியர் விஜய் என்று வேகமாக வளர்ந்தார் (’பா’ என்றால் பாடல்கள் என்றுதானே அர்த்தம். அதற்குத் தகுந்தது போலவே அவரின் இனிஷியலும் அமைந்தது ஆச்சரியம்தான்).

ஒருபக்கம் பத்திரிகைகளில் கவிதைத் தொடர்கள் எழுதினார். இன்னொரு பக்கம் சினிமாவுக்குப் பாடல்கள் எழுதினார். நடுவே கிடைக்கும் நேரங்களிலெல்லாம் தனிப் புத்தகத்துக்காக எழுதினார். அவரது ‘உடைந்த நிலாக்கள்’ தொடர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ’ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது’, ‘கண்ணாடி கல்வெட்டுகள்’, ‘அரண்மனை ரகசியம்’ என வெளியிட்ட கவிதை நூல்களும் நாவல்களும் இன்னும் பிரபலமாக்கின. ’ஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே’, ‘ஒரு கூடை நிலா’, ’காகித மரங்கள்’ என இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் எல்லோராலும் பாராட்டப்பட்டன.

இயக்குநர் ராஜகுமாரனின் ‘நீ வருவாய் என’ படத்தில் ‘பார்த்துப் பார்த்து கண்கள் பூத்ததடி’ என்ற பாடல் பா.விஜய்க்கு நற்பெயரைக் கொடுத்தது. விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘வானத்தைப் போல’ படத்தில் ‘காதல் வெண்ணிலா’ பாட்டு மிகப்பெரிய ஹிட்டடித்தது. கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து கமலை வைத்து இயக்கிய ‘தெனாலி’ படத்தில், ‘சுவாசமே... சுவாசமே...’ என்ற பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வந்து இன்னும் பா.விஜய்யின் வரிகளை பரவலாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ‘பட்டிதொட்டியெங்கும்’ என்ற சொல், தமிழ் சினிமாவில் பிரபலம். சேரனின் ‘வெற்றிக்கொடிகட்டு’ படத்தில், ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடல், பா.விஜய்யை பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்புகிற பாட்டுக்காரராக அடையாளம் காட்டியது.

’பார்வை ஒன்றே போதும்’ படத்தில் நடித்த மோனலும் குணாலும் இல்லை இப்போது. ஆனால் அவர்கள் ஆடிப்பாடிய, ‘ஏ... அசைந்தாடும் காற்றுக்கும்’ எனும் பா.விஜய்யின் பாடல், இன்றைக்கும் காற்றில் உலவிக்கொண்டுதான் இருக்கிறது.

கஸ்தூரி ராஜா இயக்கத்தில், தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில், ’நெருப்பு கூத்தடிக்குது’ என்ற பாடல், அன்றைய இளைஞர்கள் அனைவரும் முணுமுணுத்த பாடல்.

இப்படியாக பா.விஜய் தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார். ‘கூறியது கூறல்’ என்றில்லாமல், ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு வார்த்தைகளை, சொற்களை, உதாரணங்களைப் பயன்படுத்தி வித்தை காட்டினார். இதனால்தான் கலைஞர் கருணாநிதி அவருக்கு ‘வித்தகக் கவிஞர்’ எனும் பட்டத்தை வழங்கினார். பிரபுவும் பிரபுதேவாவும் இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின்’ படத்தில் பிரபுதேவாவுக்கு காயத்ரி ரகுராமிற்கும் ‘முதலாம் சந்திப்பில்' என்ற பாடல் காதலர்களின் அமுதகானமானது.

'முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே / இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே / மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன் / நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன் / காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா’ என்று வரிசைப்படுத்தி சந்திப்புகளின் மனவோட்டத்தைச் சொல்லியிருப்பார்.

’ஐந்தாம் சந்திப்பில் நான் ஐக்கியம் ஆனேனே / ஆறாம் சந்திப்பில் நான் பைத்தியம் ஆனேனே / ஏழாம் சந்திப்பில் எட்டிபிடித்தேன் / எட்டாம் சந்திப்பில் கட்டிப்பிடித்தேன்’ என்று சுவையைக் கூட்டிக்கொண்டே போயிருப்பார் பா.விஜய்.

வித்தகக் கவிஞர் பா.விஜய்
வித்தகக் கவிஞர் பா.விஜய்

அஜித்தின் ‘பில்லா’, விஷ்ணுவர்த்தனின் ‘பட்டியல்’, ‘அறிந்தும் அறியாமலும்’ போன்ற படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ஷங்கர்- ரஜினி-ரஹ்மான் கூட்டணியில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் ‘ஒரு கூடை சன்லைட்’ பாடலில் ஆங்கில வார்த்தைகளையெல்லாம் இணைத்து ஸ்டைல் காட்டியிருப்பார். ’எந்திரன்’ படத்தின் ‘கிளிமாஞ்சாரோ’ பா.விஜய்யின் கைவண்ணமும் மெய்வண்ணமும்தான்!

’ஞாபகங்கள்’, ‘இளைஞன்’, ஸ்ட்ராபெர்ரி’ முதலான படங்களிலும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துமிருக்கிறார்; இயக்கியுமிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் பா.விஜய் எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல், துவண்டு கிடக்கிறவர்களுக்கு வைட்டமின் வரிகளாக, தன்னம்பிக்கை டானிக்காக அமைந்தது.

’உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துபோகக் கூடாது / என்ன இந்த வாழ்க்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது / எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்/ காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் / உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும் / வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும் / யாருக்கில்லை போராட்டம் / கண்ணில் என்ன நீரோட்டம் / ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் / மனமே ஓ மனமே நீ மாறிவிடு / மலையோ அது பனியோ நீ மோதிவிடு’ என்று ஒவ்வொரு வரியையும் கல்வெட்டுகளாகச் செதுக்கித் தந்திருப்பார் விஜய்.

’ஒவ்வொரு பூக்களுமே...’
’ஒவ்வொரு பூக்களுமே...’

வாழ்க்கை கவிதை வாசிப்போம் / வானம் அளவு யோசிப்போம் / முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் / லட்சம் கனவு கண்ணோடு / லட்சியங்கள் நெஞ்சோடு / உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு / மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் / அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்’ எனும் ஒவ்வொரு வரியும் தன் மீது நம்பிக்கை அற்று வீழ்கிறவர்களுக்குத் தூண்டுகோல்; ஊன்றுகோல். இந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது பா.விஜய்க்கு! அதைவிட சிறப்பு விருதாக, ‘ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலை இன்றைக்கு வரை லட்சக்கணக்கான பேர் காலர் டியூனாக, டயலர் டியூனாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு விருது உள்ளிட்ட எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறார் பா.விஜய். ‘’எனக்கு வாரிசு பா.விஜய்தான்’’ என்று வாலிபக் கவிஞர் வாலி, மிகப்பெரிய மேடையில் சொன்னதைவிட வேறென்ன விருதுகள் வேண்டும் அவருக்கு?

1974 அக்டோபர் 20-ம் தேதி வித்தகக் கவிஞர் பா.விஜய் பிறந்தநாள். ’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே / வாழ்வென்றால் போராடும் போா்க்களமே’ என்று எழுதிய பா.விஜய்க்கு ஒவ்வொரு பூவும் வாழ்த்துகளைச் சொல்லும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் பா.விஜய் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in