பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டையார்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 63-ம் ஆண்டு நினைவுதினம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

‘’நான் அமர்ந்திருக்கும் இந்த நாற்காலியில் ஒரு கால், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தால் கிடைத்தது. அவருடைய பாடல்களில் நடித்ததால்தான், அடித்தட்டு மக்களிடம் நான் சென்றடைந்தேன்’’ - முதல்வரான பின்னர் ஒரு தருணத்தில் எம்ஜிஆர் கூறிய வார்த்தைகள் இவை. கம்யூனிஸம் எங்கு பிறந்ததோ அங்கேயே தோற்றுவிட்டது என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் கம்யூனிஸத்தையும் பொதுவுடமைக் கொள்கைகளையும் தன் எழுத்தால், பாமர மக்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்ததில் கோட்டை கட்டி கொடி நாட்டினார் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்!

1930 ஏப்ரல் 13-ம் தேதி, ஒருங்கிணைந்த தஞ்சாவூரில், பட்டுகோட்டைக்கு அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தார் கல்யாணசுந்தரம். அம்மா சோறூட்டி வளர்த்தாரென்றால், அப்பா கம்யூனிஸம் ஊட்டி வளர்த்தார். அவரின் தந்தை, பொதுவுடமைக் கருத்துகளில் ஊறியவர். அதுவே வாழ்க்கை எனப் போராடியவர். கல்யாணசுந்தரத்துக்கும் இந்த குணங்களும் கோபங்களும் கடமைகளும் கூடவே வளர்ந்தன. தமிழும் அவரை வளர்த்தது. தமிழின் மீது ஏற்பட்ட காதலும் சமூகத்தின் மீது உண்டான பிரியமும் சேர்ந்து அவரை இலக்கியவாதியாகவும் கம்யூனிஸ்ட்டாகவும் ஆக்கின.

சிறுவயதிலேயே சினிமாவுக்குப் பாட்டெழுதும் ஆசை வந்துவிட்டது அவருக்கு. ஆனால் முட்டிமோதிக்கொண்டே இருந்தார். அங்கே, உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், மருதகாசி என ஜாம்பவான்களெல்லாம் இருந்தார்கள். நாடகத்தில் எழுத வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டார். ’தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனால் மக்கள் வயிறு காயுது’ என்று எழுதியதற்கு அரங்கமே கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது. இதுதான் அவரின் முதல் அடையாளமானது.

பாரதிதாசன் மீது மாறாப் பற்று கொண்டிருந்தார். அவரை குருவாகவே பார்த்தார். புதுச்சேரிக்குச் சென்று அவரைப் பார்த்தார்.

’இதோ... நான் எழுதிய கவிதை’ என்று காட்டுவதற்கு பயந்துகொண்டே ‘அகல்யா’ என்ற பெயரிட்டு கவிதையைக் காட்டினார். படித்துவிட்டு வெகுவாகப் பாராட்டினார் பாவேந்தர். பிறகு தயங்கித்தயங்கி, ‘நான்தான் எழுதினேன்’ என்று சொன்னாராம்!

கோடம்பாக்கத்தில் எல்லாக் கம்பெனிக்கும் சென்று வாய்ப்பு கேட்டார். ஒருபக்கம் வறுமை, இன்னொரு பக்கம் பொதுவுடமைச் சிந்தனைகள். நடுவே பாட்டெழுதும் ஆசை. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி-யைச் சந்திக்கச் சென்றார். மெல்லிசை மன்னரின் உதவியாளர் உள்ளே சென்று, “பாட்டெழுத வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார்” என்றார். எம்.கே.ராதா நடித்த ’பாசவலை’க்கான இசைப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. சுள்ளென்று கோபமாகிவிட்டார் மெல்லிசை மன்னர். ‘’புதுசா யாருக்கும் சான்ஸெல்லாம் தரமுடியாது. அதுக்கு நேரமெல்லாம் இல்ல. கண்ணதாசன், மருதகாசின்னு யார்கிட்டயாவது கொடுத்து பாட்டை வாங்கிட்டு வாங்க’’ என்று சொல்லிவிட்டார். உதவியாளரும் பட்டுகோட்டையாரிடம் சொல்ல, ‘’என்னைப் பாக்க வேணாம்; இதை மட்டும் பாக்கச் சொல்லுங்க’’ என்று எழுதிக் கொடுத்துச் சென்றார்.

எம்.எஸ்.வி.
எம்.எஸ்.வி.

அந்த வரிகள்... அன்றைய இரவில் மெல்லிசை மன்னரை ரொம்பவே இம்சித்தது. தூங்கவிடாமல் செய்தது. ‘குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம் / குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம் / தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் / சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்’ என்கிற வரிகள் என்னவோ செய்தன. “நான் பெரிய ஆளெல்லாம் இல்லன்னு நான் நினைச்சது அன்னிக்கிதான்” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னாளில் சொல்லியிருக்கிறார்.

கல்யாணசுந்தரத்துக்குத் திரையுலகக் கதவுகள் திறந்தன. 'கொடுக்கிற காலம் நெருங்குவதால் / இனி எடுக்கிற அவசியம் இருக்காது / இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் / பதுக்கிற வேலையும் இருக்காது / ஒதுக்கிற வேலையும் இருக்காது / உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா / கெடுக்கிற நோக்கம் வளராது மனம் கீழும் மேலும் புரளாது’ என்று ‘திருடாதே’ படத்தின் பாடலை இப்போது கேட்டாலும் பசியையும் ஒட்டிய வயிறையும் நினைவுக்குக் கொண்டுவந்து இம்சைப்படுத்தும். எம்ஜிஆருக்கு இப்படி எழுதினார்.

இதேபோல, ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும்காலும்தானே மிச்சம்’ என்று எழுதிய வரிகளைக் கேட்டு தமிழகத்தின் கடைக்கோடி விவசாயிகளும் தங்கள் நிலை குறித்த துயரத்தை உணர்ந்தனர். பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் எம்ஜிஆரின் ஏழைப்பங்காளர் இமேஜுக்கு மிகவும் உதவின.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், தொழிலாளர் வர்க்கத்துக்குள் தீயை உண்டுபண்ணின.

'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் / வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான் / எழுதிப் படிச்சு அறியாதவன்தான் உழுது உழைச்சு சோறு போடுறான் / எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி நல்ல நாட்டைக் கூறு போடுகிறான்/ இவன் சோறு போடுறான் அவன் கூறு போடுறான்’ என்ற வரிகளைக் கேட்டுத்தான் அந்தக் காலத்தில் பல இளைஞர்கள், லெனினையும் மார்க்ஸையும் படிக்கத் தொடங்கினார்கள். கம்யூனிஸ சித்தாத்தத்தை அறிந்து, அதற்குள் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.

’நான் வளர்த்த தங்கை’ என்றொரு படம். இப்படியொரு படம் வந்ததுகூட எவருக்கும் தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் போலி ஆன்மிகத்தை, பொய்யான பக்தியைப் பகடி செய்திருப்பார் பட்டுக்கோட்டையார். ‘பக்த ஜனங்கள் கவனமெல்லாம் தினமும் கிடைக்கும் சுண்டலிலே / பசியும், சுண்டல் ருசியும் போனால் பக்தியில்லை பஜனையில்லை’ என்ற பாடலைக் கேட்டுவிட்டு, கரவொலி எழுப்பாத ஆன்மிகவாதிகள்கூட இல்லை!

எந்தப் பாட்டு கொடுத்தாலும் அந்தப் பாட்டை மெட்டுக்குள் கொண்டு வந்து விழ வைக்கும் வித்தையை நன்கு அறிந்தவர் கல்யாணசுந்தரம். அவரால் எதையும் உள்வாங்கி எழுத முடியும். பட்டுகோட்டையார் விவசாயி. மாடு மேய்த்திருக்கிறார். மாட்டு வியாபாரமும் செய்திருக்கிறார். மாம்பழங்களை இறக்கி விற்றிருக்கிறார். இட்லி வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.

முறுக்கு, தேங்காய், தென்னங்கீற்றெல்லாம் விற்றிருக்கிறார். மீனும் நண்டும் பிடிக்கிற தொழிலும் செய்திருக்கிறார். உப்பள வேலை செய்திருக்கிறார். மிஷின் இயக்கும் வேலையிலும் தண்ணீர் வண்டிக்காரராகவும் இருந்திருக்கிறார். அவர் செய்யாத தொழிலோ வேலையோ இல்லை. ஆகவே தொழிலாளர்களின் பாடுகளை நன்கறிந்திருந்தார். அவற்றைப் பாட்டுக்குள்ளே வேட்டு போல் வைத்துவைத்து வெடிக்கச் செய்தார்.

’கொக்கரக் கொக்கரக்கோ சேவலே’ என்ற பாடலை எழுதி மிகப்பெரிய ஹிட்டாக்கினார். ‘என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே... நீ இளையவளா மூத்தவளா’ என்று எழுதினார். அவரின் சொல்லாடல்கள் புது ரகமாக இருந்தன. ‘சின்னப்பயலே சின்னப்பயலே’ என்கிற ‘அரசிளங்குமரி’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவரின் எளிமையான வரிகளுக்குள் எப்பேர்ப்பட்ட விஷயங்களையெல்லாம் அடக்கியிருப்பார் என்பதை உணர முடியும்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய பாடலின் ஆரம்ப வரிகள் இன்று வரைக்கும் பிரபலம். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று ஆரம்பிக்கும் பாடலின் ஒவ்வொரு வரிகளும் இந்த தேசத்து இளைஞனுக்கு மறைமுகமாக அவர் விடுத்த பிரச்சாரம்!

’தங்கப்பதுமை’ படத்தின் ‘இன்று நமதுள்ளமே’ என்கிற காதல் பாடலிலும் நாம் சிக்குண்டுபோனோம். ஸ்ரீதரின் முதல் படமான ‘கல்யாண பரிசு’ படத்தின் பாடல்களை மறக்க முடியுமா என்ன? ‘ஆசையினாலே மனம்’ என்ற பாடலும் வரிகளும் நமக்குள் காதல் கும்மியடித்துவிட்டுப் போகும்.

எம்ஜிஆர்
எம்ஜிஆர்

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்ற பாடலில் காதலின் உறவைச் சொல்லியிருப்பார். ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்பதுதான் காதல் தோல்விக்கான ஒத்தடப் பாட்டாக அமைந்தது. ‘இரும்புத்திரை’ படத்தில், ‘நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் உரைக்கும்’ பாடலில் காதல் ததும்பும்.

’ஆடை கட்டி வந்த நிலவோ’ என்று பெண்ணையும் நிலவையும் வித்தியாசமாக ஒப்பிட்டதை அன்றைய பத்திரிகைகள் வெகுவாகப் பாராட்டின. ’சின்னக்குட்டி நாத்தனா சில்லறையை மாத்துனா’ என்று ஜாலியாகவும் ஆங்கிலக் கலப்புடனும் அப்போதே எழுதி, ஜனங்களின் மனதில் தனியிடம் பிடித்தார்.

‘படிப்பும் தேவை அதோடு உழைப்பும் தேவை’ என்று பஞ்ச் வைப்பார். ’எல்லோரும் இந்நாட்டு மன்னரே’ என்று முழக்கமிடுவார். ’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்று ஒற்றுமையைப் பறைசாற்றிப் பாடுவார். ’செய்யும் தொழிலே தெய்வம்’ என்று உபதேசிப்பார். ’கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல’ என்றெல்லாம் அன்றே எழுதிவைத்து நமக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.

’தனியுடமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா / தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா!’ என்று எப்போதோ எழுதியிருக்கிறார். மனிதர்கள் அனைவரையும் தொண்டு செய்ய அழைக்கிறார். ‘அதுவா மாறிரும்’ என்று விட்டேத்தியாக இருந்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

‘கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் -- ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது’ - பட்டுக்கோட்டையார் மறைந்தவுடன் கலைஞர் கருணாநிதி அஞ்சலிக் கவிதையில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

பாரதியின் காலம் குறைவு. ஆனால் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதேபோலத்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும். 1959 அக்டோபர் 8-ம் தேதி, தன் 29-வது வயதில் மறைந்தார். எத்தனை நூற்றாண்டுகளானாலும் பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கொடி பட்டொளி வீசி பறந்துகொண்டேதான் இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in