பறக்கிறதா ‘பட்டத்து அரச’னின் கொடி?

பறக்கிறதா ‘பட்டத்து அரச’னின் கொடி?

அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பட்டத்து அரசன்'. ‘களவாணி', 'வாகை சூட வா’ ‘நையாண்டி' படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளதா?

அரசர் குளத்தைச் சேர்ந்த பொத்தாரி (ராஜ்கிரண்) நாற்பது ஆண்டுகளாக ஊருக்காக கபடி விளையாடி முக்கியத் தலைக்கட்டாக இருந்து வருகிறார். மனைவி, மகள், மகன், பேரன் சகிதமாகக் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார். இந்த நிலையில், ஊர் மானத்தைக் காக்க கபடி போட்டி ஒன்றுக்காக, தன் மகன் ஆர்.கே.சுரேஷை ராஜ்கிரண் அனுப்பி வைக்க, போட்டியில் எதிர்பாராதவிதமாக அவர் இறக்கிறார். இதனால், ராஜ்கிரண் மீது கோபம் கொண்டு ஆர்.கே. சுரேஷின் மனைவியான ராதிகா, தன் மகன் அதர்வாவை கூட்டிக் கொண்டு தனியாகச் சென்றுவிடுகிறார். வளர்ந்த பிறகு தன் தாத்தா மற்றும் குடும்பத்துடன் சேர முயற்சி எடுக்கிறார் அதர்வா. இந்த நிலையில், அங்கு குடும்பத்தில் அதர்வாவின் தம்பி ப்ரோ கபடி போட்டிக்குத் தேர்வாகிறார். பழிதீர்க்க நினைக்கும் எதிர்கோஷ்டி அவர் மீது அவதூறு பரப்புகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துகொள்ள, ஊரே ராஜ்கிரணுக்கு எதிராகத் திரும்புகிறது. இதனால், ஊரை எதிர்த்து கபடி விளையாடி, இறந்த தன் தம்பியின் மீதுள்ள கறையை நீக்கப்போவதாக சபதமெடுக்கிறார் அதர்வா. கூடவே மொத்த குடும்பமும் களமிறங்குகிறது. இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் 'பட்டத்து அரசன்'.

பலமுறை பார்த்துச் சலித்துப்போன கிராமத்துக் கதையில், கபடி களத்தைப் புகுத்திப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். தன் கணவரின் மரணத்திற்கு காரணம் தன் மாமனார்தான் என நினைத்து ராதிகா அதர்வாவை கூட்டிச் செல்வதும், பின்னாளில் அதர்வா உண்மை புரிந்து குடும்பத்துடன் இணைய எடுக்கும் முயற்சிகளும் கதையோட்டத்தில் ஒட்டவேயில்லை. பொத்தாரி என கபடி ப்ளேயராக ராஜ்கிரணுக்கு கொடுத்திருக்கும் அத்தனை ஃப்ளாஷேக் காட்சிகளும், அவர் மாணவர்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளுமாக எல்லாமே மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கின்றன.

அதர்வா தான் படத்தின் கதாநாயகன் என்று யாராவது அவ்வப்போது நியாகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்ற ரீதியில்தான் இருக்கிறது முதல் பாதியில் அவரது கதாபாத்திரம். குடும்பத்தில் இறந்த ஒருவனுக்காக, அவன் மீதான பழியை நீக்க மொத்த குடும்பமும் நன்கு பயிற்சிப் பெற்ற ஆட்களை எதிர்த்து விளையாடுகிறது எனும்போது அவர்கள் அதற்கான பயிற்சி பெறும் காட்சிகளும் எமோஷனலாக அவர்களை உத்வேகப்படுத்தும் காட்சிகளும் எத்தனை வலுவானதாக நம்பும்படியாக இருக்க வேண்டும்?! ஆனால், அந்தக் காட்சிகள் எல்லாம் சிரிப்பையே வரவழைக்கின்றன.

ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், ராதிகா என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதர்வாவின் நடிப்பில் பல இடங்களில் செயற்கைத்தனம் எட்டிப்பார்த்து மிகை நடிப்பே எஞ்சுகிறது. கதாநாயகியின் கதாபாத்திரம் எல்லாம் ‘அய்யோ பாவம்’ ரகம். 'உங்க குடும்பத்துக்கு கடமைப்பட்டிருக்கிறேன்' என படம் முழுக்க அனத்திக்கொண்டே இருக்கிறார். கதாநாயகனைக் கல்யாணம் செய்து, கபடி வீராங்கனையாக அந்த குடும்பத்துக்கு இக்கட்டான சூழலில் உதவியும் செய்கிறார். இறுதியில் அதர்வா தன் தம்பி மீது தவறில்லை என்பதற்குத் தரும் விளக்கமும், அதைக் கேட்டு உடனே வில்லன் மனம் திருந்துவதும் பார்வையாளர்களைச் சோதிக்கின்றன.

படத்தில் ஜிப்ரான் இசையும், லோகநாதன் ஸ்ரீனிவாஸ் இசையும் படத்தின் ஆறுதல். சிங்கம்புலியின் ஒன்லைனர்கள் அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறது.

ஆக மொத்தத்தில், ஊருக்காக கபடி ஆடிய குடும்பம் ஒரு கட்டத்தில் அந்த ஊரையே எதிர்த்து கபடி ஆடியது என்ற ஒரு வரியை உறுதியாக நம்பியிருக்கிறார் இயக்குநர். பலவீனமான காட்சியமைப்புகளும் சுவாரசியம் இல்லாத திரைக்கதையும், படம் தொடங்கும்போதே முடிவுதெரிந்த க்ளைமாக்ஸூம் ‘பட்டத்து அரச'னைப் பதவியிழக்கச் செய்திருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in