’பருத்திவீரன் சித்தப்பு’ சரவணன்; மீண்டும் வெற்றியைத் தொட்ட யதார்த்த நடிகர்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
’பருத்தி வீரன்’ சரவணன்
’பருத்தி வீரன்’ சரவணன்

சினிமாத்துறையில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பார்கள். தடக்கென்று அறிமுகம் நிகழும். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர்கள் வரிசையாக படங்களை இயக்குவார்கள் அல்லது நடிப்பார்கள் அல்லது தயாரிப்பார்கள். பிறகு சட்டென்று காணாமல் போய்விடுவார்கள். மீண்டும் ’ரீ எண்ட்ரி’யாகி வருபவர்கள் ஒருசிலர்தான். நடிகர் சரவணன், அப்படி வந்து இன்றைக்கும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சேலம்தான் பூர்விகம். அப்பா காவல்துறையில் அதிகாரி. அம்மா நர்ஸ். சிறுவயதில் கவிதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்த சரவணனுக்கு, படிப்பிலும் நாட்டமிருந்தது. கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தார். அப்போதுதான் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் துளிர்விட்டது. அது, கமல், ரஜினியை அடுத்து, பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன் என்றெல்லாம் இருந்த காலம். இயக்குநரான ராமராஜன், நடிகராக வலம் வந்து, இளையராஜாவின் இசையில், கிராமத்துப் படங்களாக வந்து, மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த காலம்.

அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில், ராதாபாரதி இயக்கத்தில், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் பிரசாந்த் அறிமுகமாகி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கொண்டிருந்தார். சென்னைக்கு வந்து அடையார் திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்த சரவணனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1991-ல், ‘வைதேகி வந்தாச்சு’ படத்தில் அறிமுகமானார். பாடல்கள் ஹிட்டான நிலையில், படமும் வெற்றிபெற்றது; சரவணனும் பேசப்பட்டார்.

அடுத்த வருடமே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ‘பொண்டாட்டி ராஜ்ஜியம்’ படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலகலப்பாகவும் சென்டிமென்டுடனும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் தன் நடிப்பை சிறப்பாகவே வழங்கியிருந்தார் சரவணன்.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். இதையடுத்து வரிசையாக சிறிய தயாரிப்பாளர்களெல்லாம் சரவணனைத் தேடி வரத் தொடங்கினார்கள்.

இளையராஜாவை நெருங்கமுடியாத காலம் அது. தேவா கிடைத்தார். புதிய இயக்குநர், புதிய தயாரிப்பாளர், தேவாவின் இசை, சரவணனின் நடிப்பு என மினிமம் பட்ஜெட் படங்களாக வந்து, மினிமம் கியாரண்டி வெற்றியையும் கொடுத்தன. ’அபிராமி’, ‘சூரியன் சந்திரன்’, ‘மாமியார் வீடு’ என வரிசையாக படங்கள் வந்துகொண்டே இருந்தன.

சில படங்கள் சுமாராக ஓடின. இந்த சமயத்தில் அடுத்தடுத்த வருடங்களில் படங்கள் வந்தன. இயக்குநர் வி.சேகரின் ‘பார்வதி என்னைப் பாரடி’ படம் வெளியானது. சரவணனுக்கு நல்லபெயரைக் கொடுத்தது. ’அக்கரைச் சீமையிலே’, ‘முத்துபாண்டி’, ’வீட்டைப் பாரு நாட்டைப் பாரு’ என்றெல்லாம் படங்கள் வந்துகொண்டிருந்தன. படங்கள் எடுப்பதற்கும் வெளியாவதற்கும் ஏதேனும் சிக்கலென்றாலும் சரவணன் அவரால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தார். திரை வட்டாரத்தில், சரவணனின் கேரக்டர் மரியாதையுடன் பார்க்கப்பட்டது. ஆனால், படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

நடிகர் சரவணன்
நடிகர் சரவணன்

’தாய் மனசு’, ‘திரும்பிப்பார்’, ’தம்பிதுரை’ என்று ராமராஜன் போலவே கிராமத்து சப்ஜெக்டுகளாகவே தேர்வு செய்தார் என்றாலும் வெற்றிபெற முடியாமல் படங்கள் சறுக்கிக்கொண்டே இருந்தன. ஒரு இடைவெளிக்குப் பிறகு, பாலாவின் இரண்டாவது படமான ‘நந்தா’வில் வாய்ப்புக் கிடைத்தது. நாயக வேடம் என்பதில் இருந்து குணச்சித்திர வேடத்துக்கும் வில்லத்தனமான வேடத்துக்குமாக சரவணன் மாறியது அப்போதுதான்! ‘நந்தா’வில் சரவணன் பேசப்பட்டாலும் அடுத்தடுத்து படங்கள் வரவில்லை. இத்தனைக்கு அடுத்த விஜயகாந்த் என்று ஒரு தரப்பினரும் அடுத்த ராமராஜன் என்று மற்றொரு தரப்பினரும் பேசிக்கொண்டார்கள். அந்த அளவுக்கு உச்சம் தொடுவார் சரவணன் என நம்பினார்கள்.

மீண்டும் ஒரு தொய்வு. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு, 2007-ம் ஆண்டு, அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ வெளியானது. இந்தப் படத்தில் படம் முழுவதும் கார்த்தியுடனே வருகிற ‘சித்தப்பு’ கேரக்டரை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார் சரவணன். இயக்குநருக்கு, கார்த்திக்கு, இசைக்கு என நற்பெயர் கிடைத்த வேளையில், சரவணனுக்கும் நல்லதொரு அடுத்த இன்னிங்க்ஸாக அமைந்தது ‘பருத்திவீரன்’.

’பருத்திவீரன்’ - கார்த்தியுடன் சரவணன்
’பருத்திவீரன்’ - கார்த்தியுடன் சரவணன்

’’இந்தப் படம் வந்த பிறகு, இன்றைக்கு வரைக்கும் என்னை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள், ‘சித்தப்பு சித்தப்பு’ என்றுதான் கூப்பிடுகிறார்கள். என் வாழ்வில் ‘பருத்திவீரன்’ மறக்கவே முடியாத படம். என் திரையுலக வாழ்க்கையில் இரண்டாவது ஆட்டத்தை ‘பருத்தி வீரன்’தான் தொடங்கிவைத்தான்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சரவணன்.

இதைத் தொடர்ந்து, சரவணனுக்கு சின்னதும் பெரிதுமாக கேரக்டர்கள் கிடைக்கத் தொடங்கின. ’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘அழகர்மலை’, ’அலெக்ஸ் பாண்டியன்’, ‘அரண்மனை’, ‘செளகார்பேட்டை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ’கோலமாவு கோகிலா’ என ஏராளமான படங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார். நடுவே பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் சென்று, இன்னும் பாப்புலரானார்.

‘’நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்னெல்லாம் இல்லை. நடிச்சிக்கிட்டே இருக்கணும், அவ்ளோதான். அது வில்லனா இருந்தாலும் கேரக்டர் ரோலா இருந்தாலும் காமெடி ரோலா இருந்தாலும் நடிச்சிக்கிட்டே இருக்கணும். ஒரு நடிகனுக்கு வேறென்ன வேணும்’’ என்று யதார்த்தம் பேசுகிற சரவணன், 1966-ம் ஆண்டு அக்டோபர் 10-ல் பிறந்தார்.

‘பருத்தி வீரன் சித்தப்பு’ சரவணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in