ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது!

பபிதா ரிட்டர்ன்ஸ்...
பபிதா
பபிதா

பபிதா…

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு ஈடான புகழை பெற்றவர். இது தீபாவளி சீசன். இந்த நேரத்தில் அவர் நடனமாடி புகழ்பெற்ற ஒரு பாடலை சொன்னால் பொருத்தமாக இருக்கும். அது, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தில் வரும் ‘நான் சிரித்தால் தீபாளி...’ பாடல். அந்தப்பாடலில் பபிதா ஆடிய நளினமும் கவர்ச்சியும் கலந்த நடனமும் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது நினைவிருக்கிறதா?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கலகலப்பும் கிளுகிளுப்புமான படங்களைத் தந்துகொண்டிருந்த இயக்குநர் கே.பாக்யராஜின் ‘சின்னவீடு’ படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமானது. நடிகர் விஜய்யின் ‘ரசிகன்’ படத்தில் ‘பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி...’ பாடலில் பபிதாவின் நடனம் ரொம்பவே பிரபலம். இன்னும் விஜயகாந்துடன் ‘கூலிக்காரன்’, டி.ராஜேந்தருடன் ‘ஒரு தாயின் சபதம்’, கார்த்திக்குடன் ‘நட்பு’, நதியா அறிமுகமான ‘பூவே பூச்சூடுவா’ படத்தில் இரண்டாம் நாயகி என பபிதா ஒயிலாக வந்து போதையூட்டிச் சென்ற படங்களின் பட்டியல் பெரியது.

தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம், இந்தி என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பபிதா, அப்போதைய கவர்ச்சிக் கன்னிகளில் ஒருவராக ‘டைப் காஸ்ட்’ செய்யப்பட்டவர். என்றாலும் இவருக்கு அழுத்தமான திரையுலகப் பின்னணி உண்டு!

ஆம்! பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாகவும் பின்னாளில் அவருக்கு நெருக்கமான விசுவாசியாகவும் இருந்த நடிகர் ஜஸ்டினின் மகள் தான் பபிதா. திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பபிதா, சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் லக்‌ஷா கதாநாயகியாக நடித்த ‘காதலை மறந்தேன்’ படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராக தன்னுடைய மறு வரவை உறுதி செய்தார். எப்போது மீண்டும் நடிக்க வருவீர்கள் எனக் கேட்டபோது.. அதற்கு, “இப்போது” எனக் கூறி தன்னுடைய இரண்டாவது ரவுண்ட் நடிப்புப் பயணத்தை உறுதி செய்திருக்கிறார்.

அவருடன் உரையாடியபோது மனம் திறந்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் இங்கே:

“கமல் சார், தம்பி விஜய், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் சார், சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர், நவரச நாயகன் கார்த்திக் உள்பட பல ஹீரோக்களின் படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துவிட்டேன். திருமணத்துக்குப் பிறகு என்னால் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல் இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.

என்னுடைய அப்பா ஜஸ்டின், தலைவர் எம்ஜிஆரின் படங்களில் நடித்தார். எம்ஜிஆர் முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தார். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது. கமலுடன் இணைந்து ‘நாயகன்’ படத்தில் நடனமாடியதெல்லாம் மறக்க முடியாத நாட்கள். இப்போதும் கமல் சார் நடிக்க அழைத்தால் அவருடன் நடிக்க தயாராக இருக்கிறேன். ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கும் ‘பபிதா சிரித்தால் தீபாவளிதான்’ என்று கூறும் ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமா நிறையவே மாறிவிட்டது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது. என் ரத்தத்திலேயே நடனம் ஊறிப்போயுள்ளது. அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச் சொன்னால் பழைய வேகத்துடன் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்புதான் முக்கியம் தவிர கேரக்டர் முக்கியமில்லை. அதனால் எந்த வேடம் கொடுத்தாலும் அவற்றில் இயல்பாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தபிறகு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. என்றாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கேரக்டர் பேசும்படியாக இருக்க வேண்டும் என்பதால் சரியான வாய்ப்பு அமைய காத்திருக்கிறேன்!” என்கிறார் நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட தயாராகும் பபிதா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in