‘கன்னிராசி’ : கன்னி முயற்சியிலேயே செவ்வாய் தோஷம் பேசிய பாண்டியராஜன்!

38-ம் ஆண்டில் ‘ஆளை அசத்தும் மல்லியே மல்லியே..!’
பாண்டியராஜன்
பாண்டியராஜன்’கன்னிராசி’ இயக்குநர்

பாக்யராஜின் அதே குறும்புடனும் அதே வெள்ளந்தித்தனத்துடனும் குறிப்பாக, அந்தத் திருட்டு முழியுடனும் நமக்குக் கிடைத்த அருமையான நடிகர்... அட்டகாசமான இயக்குநர்... அவரது சிஷ்யப்பிள்ளை ஆர்.பாண்டியராஜன். தன் கன்னி முயற்சியாக பாண்டியராஜன் எடுத்ததுதான் ‘கன்னிராசி!’

மிக மிக எளிமையான கதைதான். திடுக் திருப்பங்கள், சினிமாத்தனங்கள், பயங்கரமான வில்லன்கள் என எந்த சினிமாப்பூச்சுகளும் இல்லாமல், வெகு அழகாகவும் இயல்பாகவும் ’கன்னிராசியை’ இயக்கி இருந்தார் பாண்டியராஜன்.

பாக்யராஜுடன் பாண்டியராஜன்
பாக்யராஜுடன் பாண்டியராஜன்

ஊரில், பெண்களை சைட் அடிப்பது, போதாக்குறைக்கு எவரிடமாவது சண்டைபோட்டு அவர்களை அடிப்பது என்று அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிற யதார்த்தமான இளைஞனே கதையின் நாயகன். அவர்தான் லட்சுமிபதி. அவர்தான் இளையதிலகம் பிரபு. வேலைவெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் தம்பியின் நிலையையும் குடும்பத்தின் நிலையையும் உணர்ந்து, ஊரில் இருக்கும் அக்கா, மாதந்தோறும் தன்னால் முடிந்த பணத்தை அனுப்பிவைப்பது வழக்கம். அதேபோல், அவ்வப்போது கடிதத்தில் நலம் விசாரிப்பதும் பழக்கம்.

கன்னிராசி
கன்னிராசி

தம்பியை எப்படியாவது முன்னுக்குக் கொண்டுவந்துவிடும், தன் மகளுக்கே திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்று தவிப்பவர்தான் சுமித்ரா. ஊரில் மகன் செய்யும் சேட்டைகளுக்கெல்லாம் பஞ்சாயத்துகள் குவிந்துகொண்டிருக்க, அப்பா கல்லாபெட்டி சிங்காரம், மகனை, மகளின் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்.

அக்கா சுமித்ரா வீட்டுக்கு வருகிறார் பிரபு. அக்காவின் கணவர் கவுண்டமணி. அக்கா மகள் ரேவதி. அக்காவுக்கு தம்பிக்கு தன் பெண்ணைக் கொடுக்க ஆசை. ரேவதிக்கும் தாய்மாமாவைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம். மற்ற விஷயத்துக்கு மச்சினன் மீது கோபப்பார்வை பேசுகிற கவுண்டமணிக்கு, இந்த விஷயம் சம்மதமே! ஆனால், ஊரில் இருக்கும் பெண்களுக்கெல்லாம் ‘ரூட்’ போட்டுவந்த பிரபுவுக்கு, அக்கா மகள் மீது முதலில் காதலும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை. ஆனால், தான் விரும்புவதைச் சொல்லி ரேவதி அழும்போது, புரிந்து உணர்ந்து காதல் கொள்கிறார்.

இந்தச் சமயத்தில்தான் கதையில் ஒரு ட்விஸ்ட். இரண்டுபேரின் ஜாதகத்தையும் எடுத்துப் பார்க்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு ஜோதிடர், ‘’பையனின் ஜாதகம் அமோகமா இருக்கு’’ என்கிறார். பெண்ணின் ஜாதகம் பார்த்துவிட்டு திடுக்கிட்டுப் போகிறார். ‘’இந்தப் பொண்ணைத்தான் இந்தப் பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கணுமா?’’ என்று கேட்கிறார் ஜோதிடர். விஷயம் இதுதான்... பெண்ணுக்கு செவ்வாய் தோஷம். ஆகவே செவ்வாய் தோஷமுள்ளவனுக்கே திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்றும் அப்படி இந்தப் பெண்ணை, இந்தப் பையன் திருமணம் செய்துகொண்டால், பையன் இறந்துவிடுவான் என்றும் ஜோதிடர் சொல்ல, அதிர்ந்து போகிறார் அக்கா. அந்த தருணத்தில் அவர்களுக்குள் வளர்ந்திருக்கும் காதலைத் தடுக்க நினைக்கிறார். தன் தம்பி உயிருடன் இருக்கவேண்டும் என்பதற்காக, அவனை வீட்டை விட்டுத் துரத்துகிறார்.

அந்த ஊரில் பாட்டு வாத்தியார் இருக்கிறார். அவர்தான் ஜனகராஜ். அவரின் உதவியாளர் காஜாஷெரீப். நிறைய பெண்களுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிற ஜனகராஜ், ரேவதியை மனதார விரும்புகிறார். ஆனால், ரேவதி தன் தாய்மாமனை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்பது தெரியவருகிறது. இதயமே சுக்குநூறாகிறது அவருக்கு! அக்கா வீட்டைவிட்டுத் துரத்திய நிலையில், பிரபு என்ன செய்வதென தெரியாமல் இருக்க, அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் ஜனகராஜ்.

பிரபுவும் ரேவதியும் திருமணம் செய்வதை, கடுமையாக எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதையும் தீவிரப்படுத்துகிறார்கள். ஒருவழியாகத் திருமணம் முடிவாகிறது. அந்த நாளும் வருகிறது. ரேவதி மணக்கோலத்தில் இருக்க, அங்கே வரும் பிரபு, ஜாதங்களையும் தோஷங்களையும் சொல்லி அதில் உள்ள மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் சொல்லிப் புரியவைக்க முயற்சி செய்கிறார். ‘’நீயும் நானும் சேர்ந்தாத்தான், நான் சாகணும்னு இல்ல. நீ என்னைவிட்டுட்டு வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அடுத்த நிமிஷமே, நான் செத்துப்போயிருவேன்.

அதனால, உன் கூட ஒரேயொரு நாளாவது வாழ்ந்துட்டு செத்தேன்னா நிம்மதியா சாவேன்’’ என்கிறார் பிரபு. கலங்கிக் கதறுகிறார் ரேவதி. சுற்றி நிற்கிற உறவுகளும் நெகிழ்ந்து நெக்குருகிப் போகிறார்கள். ரேவதி கழுத்தில் தாலி கட்டுகிறார். திருமணமும் நடந்து முடிகிறது. அப்போது மயங்கி விழுகிறார் ரேவதி. ’’மாமா, உன் கூட சேரமுடியாதுன்னு நினைச்சு, விஷத்தைக் குடிச்சிட்டேன்’’ என்கிறார். அப்படியே உயிரை விடுகிறார். ‘ஜாதகங்களையும் தோஷங்களையும் பார்க்கிற அதேவேளையில், இவர்களின் மனங்களையும் பாருங்கள்’ என டைட்டில் போட்டு படத்தை முடிக்கும் பாண்டியராஜன், அங்கிருந்துதான் தன் திரைப்பயணத்தைத் தொடங்குகிறார்.

பிரபுவின் நடிப்பும் ரேவதியின் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். கவுண்டமணியின் லொள்ளும் கல்லாபெட்டி சிங்காரத்தின் டைமிங்கும் மனசை அள்ளும். ஜனகராஜின் காமெடியும் குணச்சித்திரமும் கலந்துகட்டி இரண்டுவிதமாகவும் நம்மை ஆட்கொள்ளும். சுமித்ராவின் பண்பட்ட நடிப்பு, இந்தக் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியது.

ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் கேமரா, அப்படியே கவிதை கவிதையாக காட்சிகளை அள்ளிக்கொண்டு வந்தது. பாக்யராஜின் மற்ற சிஷ்யர்களான ஜி.எம்.குமாரும் லிவிங்ஸ்டனும் படத்துக்கான திரைக்கதையை எழுதினார்கள். கதை, வசனம் எழுதி இயக்கினார் பாண்டியராஜன்.

‘முந்தானை முடிச்சு’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் மூவரும் பாக்யராஜிடம் இருந்து விலகினார்கள். அதனால், படத்தில், பள்ளிக்கூடத்தில், தவக்களை, மாஸ்டர் சுரேஷ் முதலானவர்களைப் பார்த்து, “வாங்கடா மும்மூர்த்திகளா... குரு துரோகிகள்டா நீங்க” என்பது போல் வசனம் பேசியிருப்பார் பாக்யராஜ்.

’கன்னிராசி’ படத்தில், பாக்யராஜைப் போலவே முகச்சாயலும் மூக்குக்கண்ணாடியும் அணிந்தவர் ஒருவர், கோயிலில் வேண்டுவார்...’’சாமீ... பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டோ, பெத்தவங்களை மதிக்காமலேயோ நான் தனிக்குடித்தனம் போகலை. என்னைப் புரிஞ்சு, என் தப்பை மன்னிச்சிரு’’ என்று வேண்டுவது போல், முதல் காட்சியை வைத்திருப்பார் பாண்டியராஜன்.

பிரபுவின் அறிமுகக்காட்சி. குளத்தில் குளித்துவிட்டு, விபூதியும் பக்தியுமாக, அர்ச்சனைத் தட்டுடன் வந்து, ‘’இந்த அப்ளிகேஷனை சாமிகிட்ட வைச்சு எடுத்துக்கிட்டு வாங்க’’ என்று சொல்லுவார். அருகில் பாண்டியராஜன் யாரோ ஒருவர் போல் நிற்பார். கூடவே அவரின் அப்பா கேரக்டர், ‘’பாருடா இந்தப் புள்ளைய... எவ்ளோ பொறுப்பா இருக்காப்ல’’ என்பார். பாண்டியராஜன், பிரபுவிடம் “எந்தக் கம்பெனிக்கு அப்ளிகேஷன்?” என விசாரிப்பார். ‘’நாலு தெரு தள்ளி இருக்கிற உஷாவுக்குதான் இந்த லவ் அப்ளிகேஷன்’’ என்பார். படத்தின் தொடக்கமே இப்படித்தான் கலகலவென, லகலகவென ஆரம்பமாகும்.

பாண்டியராஜனின் சொந்த ஊர், சென்னை சைதாபேட்டை. சைதாபேட்டை காரணீஸ்வரா என்று வசனம் வைத்திருப்பார். பாக்யராஜ், கோவையில் இருந்த காலகட்டத்தில், மன்றம் ஒன்றில் கேரம்போர்டு விளையாடிப் பொழுதைக் கழித்தார். அந்த கேரம்போர்டு விஷயத்தை, பிரபு கேரக்டருக்குப் பொருத்தியிருப்பார்.

‘கபடி கபடி கபடி’ என்று விளையாடிக்கொண்டு, அந்தக் கோடு தொடும்போது, டைரக்‌ஷன் போடுவார் பாண்டியராஜன். பிரபு, ரேவதியை அடுத்து நம் மனதில் ஜனகராஜ் கதாபாத்திரம் பதிந்துவிடும். எஸ்.என்.லட்சுமி இந்தப் படத்தில், பிரபுவுக்கு அம்மாவாக நடித்தார்.

பாண்டியராஜனிடம் பழைய நினைவுகளை கிளறினோம். ‘’சூப்பர் சுப்பராயனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, ‘கன்னிராசி’ படத்துல எம்எல்ஏ மகனா ஒரு சின்ன சீன்ல நடிக்கவைச்சேன். இந்தப் படம் வந்த பிறகு, சில மாசங்கள் கழிச்சு, பார்வையற்றோர் பள்ளி ஒன்றின் விழாவுக்குப் போயிருந்தேன். அப்போ அங்கே இருந்த பசங்க ரெண்டு மூணு பேரு, ’அங்கிள், சூப்பரா நடிச்சிருந்தீங்க’ன்னு, சூப்பர் சுப்பராயன் நடிச்ச காட்சியைச் சொன்னாங்க. விஷயம் என்னன்னா... சூப்பர் சுப்பராயனுக்கு நான்தான் குரல் கொடுத்திருந்தேன். அதனால் அந்தக் குரல் அந்தப் பசங்க மனசுல அப்படியே தங்கிருச்சு’ என்றார் பாண்டியராஜன்.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார் இளையராஜா. ‘ஆளை அசத்தும் மல்லியே மல்லியே’ பாட்டை இன்றைக்கும் பைபாஸ் சாலைகளின் டீக்கடைகளிலும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நம்மூர் லாரிகளிலும் தவறாமல் ஒலிப்பதைக் கேட்கலாம்.

படத்தில், ‘முந்தானை முடிச்சு’ பற்றி பெண்கள் பேசிக்கொள்வதும் பாக்யராஜைப் பற்றிய விஷயங்களும் காட்சிகளாக வரும். ‘தூறல் நின்னுபோச்சு’ படம் பார்க்க பிரபுவும் ரேவதியும் செல்வார்கள். இப்படி, சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் ‘குருமரியாதை’ செய்திருப்பார் பாண்டியராஜன்.

ஜாதகம், செவ்வாய் தோஷம் என்பதை அலசுகிற கதை. ‘நம்புங்கள்’ என்றும் சொல்லாமல், ‘நம்பாதீர்கள்’ என்றும் சொல்லாமல், அதைக் கொண்டு, நம் சமூகத்தில் நடக்கிற குளறுபடிகளை மட்டுமே எடுத்துக்காட்டியிருப்பார் பாண்டியராஜன்.

1985-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி வெளியானது ‘கன்னிராசி’. படத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. பாண்டியராஜன் என்கிற இயக்குநருக்கு அட்டகாசமான வரவேற்பு கொடுத்தார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் இந்தப் படம் வந்தபோது, பாண்டியராஜனுக்கு 26 வயது. அந்த வருடத் தொடக்கத்தில், ‘கன்னிராசி’ எடுத்தவர், அந்த வருடத்தின் இறுதியில் ‘ஆண்பாவம்’ படத்தில் மெகா வெற்றியைச்சுவைத்தார்.

இறுதிக் காட்சியில், ரேவதி கேரக்டரை சாகடிக்காமல் விட்டிருந்தால், பாஸிடீவ் விஷயங்கள் படத்துக்கும் பாஸிடீவ் சேர்த்திருக்கும் என்று அப்போதே ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள். பிரபுவும் ரேவதியும் பாண்டியராஜனும் ஜனகராஜும் முக்கியமாக இளையராஜாவின் இசையும் 38 ஆண்டுகள் கழித்தும் மக்கள் மனங்களில் அழியாமல் நிற்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in