அம்மா கேரக்டருக்கு உயிர்கொடுத்த பண்டரிபாய்!

பாசம் ததும்பும் முகம் கொண்ட பண்டரிபாயின் 94-வது பிறந்தநாள்
அம்மா கேரக்டருக்கு உயிர்கொடுத்த பண்டரிபாய்!

’பாகுபலி’ படத்தில் காலில் சங்கிலியுடன் ஓர் அடிமைபோல இருப்பார் அனுஷ்கா. ‘காலம் வரும். என் மகன் வருவான். விடுதலை கிடைக்கும்’ எனக் காத்திருப்பார். அதேபோல் மகன் பிரபாஸ் வருவார்; விடுதலை கிடைக்கும். இப்படித்தான் எம்ஜிஆர் நடித்த அந்தப் படத்தில், விலங்குடன் காத்திருப்பார் அந்த நடிகை. ‘விடுதலை கிடைக்கும் காலம் வரும். என் மகன் வந்து விடுதலையைத் தருவான்’ என்பார். அதேபோல், எம்ஜிஆர் வருவார். ‘தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை’ என்று பாடுவார். வீரர்களைத் துவம்சம் செய்வார். அம்மாவுக்கு மட்டுமின்றி, மொத்த தேசத்துக்கும் விடுதலை பெற்றுத் தருவார். எம்ஜிஆர் படம்தான் என்றாலும் அம்மாவை மையப்படுத்தியும் அடிமைத்தனத்தை ஒழிக்கவுமான அந்தப் படத்துக்கு ‘அடிமைப்பெண்’ என்றே பெயர் வைக்கப்பட்டது. ‘அடிமைப்பெண்’ணாக நடிப்பில் நம்மை சுதந்திர வேட்கைக்குள் இறக்கிய அந்த நடிகை... பண்டரிபாய்.

‘தளபதி’ படத்தில், கோயிலுக்கு வந்து அம்மாவைப் பார்ப்பார் ரஜினி. தன் மகன் என்று தெரியாத அந்த அம்மா, ரஜினியைப் பார்த்ததும், ஏதோவொன்று உள்ளே உருளும். கனத்துப் போவார். ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’ என்ற பாடலும் நம்மை உலுக்கியெடுக்கும். அதற்கெல்லாம் ஆதார சுருதியாக இருந்தது ‘தெய்வமகன்’ படம்.

அப்படத்தில், ஆசிரமத்தில் அனாதை போல் வளர்ந்த சிவாஜி, தன் அம்மாவை கோயிலில் பார்ப்பார். அந்த அம்மாவுக்கு பார்த்ததும் தாய்மை உணர்வு பீறிடும். மனதை என்னவோ செய்யும்.

இன்னொருநாள், இரவில் வீட்டுக்குள் நுழைந்து அம்மாவை அருகில் பார்ப்பார் சிவாஜி. நெகிழ்ந்து, நெக்குருகுப் போவார். ‘தெய்வமே... தெய்வமே... கண்டுகொண்டேன் அன்னையை’ என்று உருகி உருகிப் பாடுவார். அந்தப் படத்தில் அம்மாவாக நடித்த பண்டரிபாயை நம் சொந்த அம்மாவாக, பெரியம்மாவாக, சின்னம்மாவாக, பக்கத்து வீடுகளில் உள்ள அம்மாவாகவே பார்த்தோம்; அவரின் நடிப்பில் அண்மையானோம்.

தமிழ் சினிமாவில் அநேகமாக, ‘இவர் அம்மா கேரக்டருக்கு’ என்று ஒதுக்கி முத்திரை குத்தியது கண்ணாம்பாள் காலத்தில்தான் இருக்க வேண்டும். அதற்கு முன்பு அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு அம்மா வேடங்களில் நடித்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி காலங்களில் காலையில் இந்தப் படத்தில் அவருக்கு அம்மா, மாலையில் அந்தப் படத்தில் அவருக்கு அம்மா என்று நடித்தார்கள். அடுத்ததொரு காலகட்டம் வந்தது. அதுதான் பண்டரிபாயின் காலம். அன்று தொடங்கி கமல், ரஜினி காலத்திலும் ‘அம்மா’வாகவே வாழ்ந்த அந்த அன்பும் கருணையும் கொண்ட முகம்... அவ்வளவு எளிதாக தமிழ் சினிமாவும் ரசிகர்களும் மறந்துவிடாத முகம்!

பிறந்தது கர்நாடகாவில். சிறுவயதில் அந்த உருண்டைமுகமும் கருணை விழிகளும் பண்டரிபாயைத் திரையுலகிற்குக் கொண்டு வந்தன. கன்னடப் படங்களில் அறிமுகமானவர், தொடர்ந்து அங்கே ராஜாங்கமே நடத்தினார். இன்றைக்கு வரை உள்ள கன்னடத் திரையுலகின் வரலாற்றில், பண்டரிபாயின் சரித்திரம் நிறையப் பக்கங்கள் கொண்டதாகவே இருக்கிறது.

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ காலத்திலேயே பண்டரிபாய், தமிழிலும் நடிக்க வந்துவிட்டார். படத்தில் குணசேகரனுக்கும் தங்கை கல்யாணிக்கும்தான் முக்கியத்துவம் என்றாலும் பண்டரிபாய் தன் பாந்தமான நடிப்பால் வெகுவாகவே கவர்ந்திருப்பார். ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே...’ என்று பாடி நம் மனங்களையெல்லாம் ஈர்த்திருப்பார்.

பிறகு பல படங்களில் நாயகியாகத்தான் நடித்தார். தமிழில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படமான ‘அந்தநாள்’ படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்துக் கலக்கியிருப்பார். ‘சிவாஜியைக் கொலை செய்தது யார்?’ என்ற விசாரணையுடன் தொடங்கும் படத்தின் முடிவில், பண்டரிபாய் சொல்லும் வார்த்தைகளும் அட்சரம் பிசகாமல் பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வசனங்களும் அப்போதே பிரமிக்கவைத்தன.

குணசித்திரக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. அம்மா கதாபாத்திரத்துக்கு நடிக்க, கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கு பண்டரிபாய் பொருத்தமானவர் என தமிழ் சினிமா முடிவு செய்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் என அறுபதுகளின் மத்தியில் இருந்து தொண்ணூறுகள் வரைக்கும் ‘அம்மா... அம்மா... அம்மா...’ என்றே வாழ்ந்துகாட்டினார் பண்டரிபாய்.

‘எல்லா படத்துலயும் அம்மா கேரக்டர்தான். ஆனா ஒவ்வொரு படத்துக்கும் பண்டரிபாய் ஒரு உடல்மொழி வச்சிருப்பாங்க. மிகச் சிறந்த நடிகை’ என சிவாஜி கணேசன் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். ‘இந்தப் படத்துல யாரு எனக்கு அம்மா? பண்டரிபாயையே போட்ருங்களேன். நல்லாருக்கும்’ என்பாராம் எம்ஜிஆர். படத்தின் இயக்குநர்கள் கதை சொல்லும்போதே... ‘பண்டரிபாய் மேடம்தான் சார் அம்மா. அவங்க பையன் சார் நீங்க...’ என்றுதான் எல்லா ஹீரோக்களும் கதை சொன்னார்கள். இப்படித்தான் பண்டரிபாய் எனும் ஆகச்சிறந்த நடிகையின் ராஜாங்கம், தமிழ் சினிமாவில் வளர்ந்தது; தடம் பதித்தது!

‘தெய்வமகன்’ படத்தில் வேறொரு அம்மா. ‘அடிமைப்பெண்’ படத்தில் இன்னொரு முகம் காட்டும் அம்மா. ‘கெளரவம்’ படத்தில் சாந்தமும் பணிவும் கொண்டு புருஷனின் எல்லையை மீறாத, மகன் மீது நேசம் கொண்ட பாவப்பட்ட அம்மா. திருடனாக வந்தவன் காயத்துடன் வந்திருக்க அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனைக் காப்பாற்றி, பிறகு அவனும் தன் பிள்ளைதான் எனத் தெரியவரும் போது, கலங்கித் தவித்து, ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டான்’ என்கிற பூரிப்பைக் காட்டுகிற அம்மா... என்று பண்டரிபாய் எடுத்துக்கொண்ட அம்மா கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, தன் உடல்மொழியை மாற்றினார். குரலின் ஏற்ற இறக்கங்களுக்கு உயிர் கொடுத்தார். நிறைய பட விமர்சனங்களில், பண்டரிபாயின் நடிப்பும் தமிழ் உச்சரிப்பும் ரொம்பவே பாராட்டப்பட்டன.

‘நம்நாடு’ படத்தில் பண்டரிபாய் பேசப்பட்டார். ’எங்க வீட்டு பிள்ளை’யில் எம்ஜிஆரின் அக்காவாக, கொடுமைக்கார நம்பியாரின் மனைவியாக பரிதாபப்பட வைத்திருப்பார். ‘வசந்தமாளிகை’ படத்தில் பண்டரிபாயின் நடிப்பும் சிவாஜிக்கும் அவருக்குமான காட்சிகளும் நெகிழவைத்துவிடும். மாலைக்கண் நோயுடன் போராடுகிற சிவாஜிக்கு அம்மாவாக பண்டரிபாய் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். ‘நான் வாழவைப்பேன்’ படத்திலும் சிவாஜிக்கு அம்மாவாக, வாழ்ந்திருப்பார்.

எம்ஜிஆருடன் ‘அன்னமிட்ட கை’, ‘இதயக்கனி’, ‘நேற்று இன்று நாளை’ முதலான படங்களில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்தார். திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் கவிஞர் வாலி எழுதிய பாடல் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கோயிலில், சினிமாப் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ரஜினி நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவான ’மன்னன்’ படத்தையும் பாடல்களையும் எப்படி மறக்கமுடியும்?

இசைஞானி இளையராஜா இசையில், கே.ஜே.ஜேசுதாஸின் குரலில், கால்கள் நடக்க முடியாமல் இருக்க, கைகள் செயலிழந்துவிட... ரஜினிகாந்த் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்ல, குளிப்பாட்டிவிட, தலைவாரிவிட... ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ என்ற அந்தப் பாடலும் பண்டரிபாயின் நடிப்பும் நம்மை கண்கலங்கச் செய்துவிடும். பார்க்கின்ற ரசிகர்களின் அம்மாக்கள் அங்கே பிம்பமாக, அவரவருக்குத் தெரிந்தார்கள். இன்றைக்கு, அந்தக் காட்சியை கவனித்துப் பார்த்தால், பண்டரிபாயின் முகமும் கண்களும் புன்னகையும் கைகளும் கைவிரல்களும் தனித்தனியே நடித்து, தாய்மையை நமக்குள் தளும்பத்தளும்பக் கொடுத்திருக்கும்!

நடிகை பண்டரிபாய்... 1928 செப்டம்பர் 18-ம் தேதி பிறந்தார். 2003 ஜனவரி 29-ம் தேதி மறைந்தார்.

அம்மாவின் நினைவுக்கு மரணமே இல்லை. நடிகையாக அல்லாமல், ஒவ்வொருவரும் அம்மாவாகவே பார்க்கிற பண்டரிபாய்க்கும் மரணமே இல்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in