
நடிகர் கமல்ஹாசன்- மணி ரத்னம் இணையும் படத்தில் பான் இந்திய கதாநாயகர்கள் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘விக்ரம்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்தப் படம் முடிந்த பிறகு அடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் தனது 234-வது படத்தில் நடிக்க இருக்கிறார். ’பொன்னியின் செல்வன்2’ இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது படக்குழு. இதற்கிடையில் கமல் படத்திற்கான கதை விவாதத்திலும் இருக்கிறார் மணிரத்னம்.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் மற்ற மொழி முன்னணி கதாநாயகர்களும் நடிக்க இருக்கிறார்கள். இவர்கள் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்காமல் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக, இதில் ஷாருக்கான் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் மற்ற மொழி கதாநாயகர்களும் நடிக்கும் போது படத்தின் மார்க்கெட்டுக்கும் உதவியாக இருக்கும் என்பதாலேயே இந்தத் திட்டம் என்கிறார்கள்.