ஒரு சினிமா காதலரின் டைரிக் குறிப்பிலிருந்து...

சினிமா டைரி
சினிமா டைரி

அறுபதுகளில் ஆசை தீர சினிமாக்களை ரசித்த ஒருவரின் டைரிக் குறிப்பின் பக்கங்கள், சமூக ஊடகங்கள் சிலாகிக்கப்பட்டு வருகின்றன.

ஓடிடி காலத்தில் சினிமாவும் அது சார்ந்த ரசனைகளும் ரசம் இழந்திருக்கின்றன. அவை அடுத்த தளத்துக்கு சென்றிருப்பதாகவும் சொல்வார்கள். ஆனால் காட்சி பொழுதுபோக்கில் சினிமாவைத் தவிர இதர போக்கிடம் இல்லாத அக்காலத்தில், ரசிகர்கள் திரைப்படங்களை கொண்டாடியதும், திரையரங்குகளை முற்றுகையிட்டதும் அலாதியானவை.

தலைமுறைகளுக்கு முன்னர், சினிமா பார்ப்பதையும் அவற்றை சிலாகிப்பதும் ஒரு கலாச்சார நிகழ்வாக நீடித்திருக்கிறது. அறுபதுகளில் அப்படி ஒரு சினிமா ரசிகர் திரைப்படங்களை தேடித்தேடி ரசித்ததும், ஒரு நோட்டு போட்டு அதில் அவற்றை பட்டியலிட்டதும் தற்போது பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. அந்த சீனியர் ரசிகரின் பேரன் தற்போது தனது தாத்தாவின் டைரி பக்கங்களை ட்விட்டரில் கடை விரித்திருக்கிறார்.

வரிசை எண், நாள், படத்தின் பெயர், திரையரங்கு(கொட்டகை), மொழி, நேரம், கட்டணம் இப்படி மெனக்கிட்டு தான் ரசித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தியிருக்கிறார் அந்த ரசிகத் தாத்தா. பேரன் பகிர்ந்த அந்த பழுப்பேறி, செல்லரித்த நோட்டுப் புத்தகங்கள் 1960ன் மத்தியில் பதிவாகி இருக்கிறது. தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், இந்தி என அக்காலத்தில் வெளியான சகல மொழி திரைப்படங்களையும் ரசித்து தீர்த்திருத்திருக்கிறார் மேற்படி தாத்தா.

எம்ஜிஆர் நடித்த ’நான் ஆணையிட்டால்’ திரைப்படத்தை 1966ல் பிராட்வே ‘கொட்டகை’யில் ரூ.1.25 கட்டணத்தில் இரவு 10 மணி காட்சியாக கண்டு களித்திருக்கிறார் ரசிக தாத்தா. இது அவரது 286வது திரைப்படம் என்கிறது நோட்டின் கூடுதல் தகவல். வெறுமனே பதிவு செய்தது மட்டுமன்றி கூடுதலாக ஒரு விமர்சகர் அவதாரத்தையும் அவ்வப்போது எடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, ’அன்பே வா’ திரைபடம் ’கம் செப்டம்பர்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நகல் என்ற அரிய தகவலை போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார்.

இவற்றை விதந்தோதி இருக்கும் பேரனார், தற்காலத்தில் இதையே letterboxd என்ற சமூக ஊடகத்தின் உதவியுடன் சினிமா ரசிகர்கள் செய்து வருவதையும் ஒப்பிட்டிருக்கிறார். ரசிக தாத்தாவின் சினிமா சிலாகிப்புகளும், அவர் கண்டுகளித்த திரைப்படங்கள் குறித்தான பதிவுகளும் ட்விட்டரில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in