பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது: ஜனாதிபதி வழங்கினார்

பழம்பெரும் நடிகை சவுக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது: ஜனாதிபதி வழங்கினார்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான நடிகை சவுக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி இன்று வழங்கினார்.

1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுக்கார் ஜானகி, தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுக்கார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள சவுக்கார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம் என தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக திரை உலகில் பதிய வைத்தவர் சவுக்கார் ஜானகி.

தமிழகத்தை ஆண்ட கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் என நான்கு முதல்வர்களுடன் பயணித்தவர். மூன்று முதல்வர்களுடன் சினிமாவில் நடித்தவர் என்கிற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழி சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், பிரேம்நசீர், ராஜ்குமார் என எல்லோருடனும் நடித்தவர் சவுக்கார் ஜானகி.

தமிழில் ஜெமினி கணேசன், ஜெயசங்கர், சிவகுமார், ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. குமுதம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, உயர்ந்த மனிதன், பாபு, புதிய பறவை, எம்ஜிஆருடன் என் கடமை, ஒளிவிளக்கு, ஜெமினியுடன் மாலையிட்ட மங்கை, காவியத்தலைவி, இருகோடுகள் மற்றும் கே.பாலச்சந்தரின் முதல் படமான நீர்க்குமிழியின் கதாநாயகி, தொடர்ந்து எதிர்நீச்சல், பாமாவிஜயம், ரஜினியின் அம்மாவாக தில்லு முல்லு, சிறிய வயது கமல்ஹாசனுடன் பார்த்தால் பசி தீரூம் உள்ளிட்ட படங்கள் என 70 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் பேர் சொல்லும் பல படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த காவியத்தலைவி என்கிற சொந்தப்படத்தை தயாரித்து இரு வேடங்களில் நடித்தார் சவுக்கார் ஜானகி.

சவுக்கார் ஜானகிக்கு 1968-ம் ஆண்டே கலைமாமணி விருது அண்ணா வழங்கினார். அதன் பின்னர் இருகோடுகள் படத்திற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். தொடர்ந்து நந்தி விருது என பல விருதுகளை நடிப்புக்காக பெற்றுள்ளார். சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் நடைபெற்றபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சௌகார் ஜானகியை கவுரவித்தார்.

இச்சூழலில் அவருக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது மத்திய அரசு. இந்த விருது கிடைத்திருப்பது தாமதமான ஒன்று என்றாலும், எதிர்பாராத நேரத்தில் பத்மஶ்ரீ விருது கிடைத்திருப்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார் சவுக்கார் ஜானகி. இந்நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நடிகை சவுக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in